தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

மக்கள் வரிப்பணம் வீணாவதா? 11 லட்சத்தில் குடிநீர்த் தொட்டி; 13 லட்சத்தில் கழிவறை: பயன்பாட்டுக்கு வராமல் பூட்டிக்கிடப்பதால் மக்கள் அவதி!

தாராபுரம்:
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னக்காம்பாளையம் கிராமத்தில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இக்கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட பட்டியல் இனத்தைச் சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய, கடந்த ஆண்டு ரூ. 11 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஒன்று கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ஓராண்டு கடந்தும் இன்னும் பொதுமக்களுக்குக் குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை.

இதனால், அப்பகுதி மக்கள் தங்களின் அன்றாடக் குடிநீர்த் தேவைக்காகக் காலி குடங்களுடன் அருகிலுள்ள விவசாயத் தோட்டங்களுக்குச் சென்று, கிணற்று உரிமையாளர்களிடம் கெஞ்சிக் கூத்தாடித் தண்ணீர் வாங்கி வரும் அவல நிலை நீடிக்கிறது. இப்பகுதிக்குக் காவிரி கூட்டுக்குடிநீர் வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே விநியோகிக்கப்படுவதாக மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். எனவே, தயார் நிலையில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு, அருகிலுள்ள ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீரேற்றி, குழாய்கள் மூலம் விநியோகம் செய்யக் கோரி, பொதுமக்கள் காலி குடங்களுடன் தொட்டியின் முன்பு நின்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

“பெற்றோர் இல்லாத பிள்ளைகளாய் தவிக்கிறோம்” – சமூக ஆர்வலர் ஆதங்கம்
இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் துளசிமணி கூறுகையில்:

“கடந்த பல ஆண்டுகளாக உவர்ப்புத் தண்ணீரையும், காவிரி தண்ணீரையும் கலந்து குடித்து வருவதால், இங்குள்ள மக்களுக்கு அடிக்கடி உடல்நலக் குறைவு ஏற்படுகிறது. குறிப்பாக, பள்ளி செல்லும் குழந்தைகளுக்குச் சளி மற்றும் இருமல் தொந்தரவு தொடர்கதையாக உள்ளது.

மக்களின் கோரிக்கையை ஏற்று ரூ. 11 லட்சத்தில் மேல்நிலைத் தொட்டி கட்டப்பட்டு, குழாய் பதிப்பதற்காகப் பி.வி.சி (PVC) குழாய்களும் கொண்டு வந்து இறக்கப்பட்டன. ஆனால், அதற்குள் ஊராட்சி நிர்வாகத்தின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால், பணிகள் அப்படியே முடங்கிவிட்டன. இதனால் நாங்கள் செலுத்திய வரிப்பணம் வீணாகிக் கொண்டிருக்கிறது. தற்போது இக்கிராமத்தின் தேவைகளை நிறைவேற்ற ஊராட்சி நிர்வாகமும் இல்லை; தொகுதிக்குச் சட்டமன்ற உறுப்பினரும் (MLA) இல்லை. யாரிடம் சென்று எங்கள் குறைகளைக் கூறுவது என்று தெரியாமல், பெற்றோர் இல்லாத பிள்ளைகளைப் போலத் தவித்து வருகிறோம். திருப்பூர் மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடியாகத் தலையிட்டு எங்களுக்குக் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

பூட்டிக்கிடக்கும் ரூ. 13 லட்சம் சமுதாயக் கழிப்பிடம்: திறந்தவெளியைப் பயன்படுத்தும் அவலம்!

குடிநீர்ப் பிரச்சினை ஒருபுறமிருக்க, தூய்மை பாரத வந்த இயக்கம் 2.0 திட்டத்தின் கீழ் (2024-2025), சின்னக்காம்பாளையம் 6-வது வார்டில் ஜெயம்மாள் மற்றும் பார்வதி ஆகியோரது வீட்டிற்குப் பின்புறம் ரூ. 13 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கழிப்பிடக் கட்டிடம் ஒன்று கட்டப்பட்டது.

இக்கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகியும், இதுவரை பொதுமக்களின் பயன்பாட்டிற்குத் திறந்து விடப்படவில்லை. இதனால், அப்பகுதி மக்கள் வேறு வழியின்றி திறந்தவெளியைப் பயன்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது இந்தக் கழிப்பிடக் கட்டிடம் பூட்டப்பட்டு, சுற்றிலும் முள் புதர்கள் மண்டிப் போய்க் காட்சியளிக்கிறது. இந்தச் சுகாதாரக் கழிப்பிடத்தை உடனடியாகத் திறந்து பயன்பாட்டிற்குக் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரே கிராமத்தில் குடிநீர்த் தொட்டி, சமுதாயக் கழிப்பிடம் என மக்கள் பயன்பாட்டுக்கான திட்டங்கள் முடங்கிக் கிடப்பதைக் கண்டித்து மக்கள் நடத்திய தொடர் ஆர்ப்பாட்டங்களால் தாராபுரம் சின்னக்காம்பாளையம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்குமா என்பதைப் எதிர்பார்த்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மனவேதனையுடன் காத்திருக்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *