இந்தியா சார்பாக, இங்கிலாந்து மற்றும் மொனாக்கோ நாடுகளில் நடைபெறும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்

இந்தியாவின் கடல்சார் கண்டுபிடிப்புத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாக, முதன் முறையாக மாணவர்களால் உருவாக்கப்பட்ட, மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் அடுத்த தலைமுறை மின்சார பந்தயப் படகை குமரகுரு கல்வி நிறுவனங்கள் அறிமுகப்படுத்தியுள்ளன.

கோவை குமரகுரு வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ஐஎன்எஸ் அக்ரானி (INS Agrani) செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார் மற்றும் பெங்களூரு 6த் எலிமெண்ட் இன்ஜினியரிங் (6th Element Engineering) நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குநருமான திரு. கிரெய்க் மரியோ டி’மெல்லோ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு அறிமுகம் செய்து வைத்தனர்.

சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கவுள்ள மாணவர் குழுக்களை தனது ‘வீடு’ போன்ற கடலுக்கு அன்புடன் வரவேற்ற இந்திய கடற்படையின் ஐ.என்.எஸ். அக்ரானி (INS Agrani) கப்பலின் செயல் அதிகாரி கேப்டன் பிரதீப் பிரேம்குமார், கோயம்புத்தூரைச் சேர்ந்த பொறியியல் மாணவர் குழுக்கள் சர்வதேச அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிடுவதைக் கண்டு பெருமிதம் கொள்வதாகத் தெரிவித்தார்.

குமரகுரு கல்வி நிறுவனங்களின் ‘யாலி 1.0’ திட்டம் முதல் இத்தகைய புதுமை முயற்சிகளுடன் தனக்குள்ள தொடர்பை நினைவுகூர்ந்த அவர், இந்த கோடையில் சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்கத் தயாராகும் மாணவர்களின் பொறுப்புணர்வை வலியுறுத்தினார்.

டீம் சீ சக்தி (Team Sea Sakthi) மற்றும் டீம் இன்கிராஃப்ட் (Team InCraft) ஆகிய குழுக்கள் எங்குச் சென்றாலும் இந்திய தேசியக் கொடியை உயர்த்திப் பிடியுங்கள். அதுவே உங்கள் அடையாளமாக இருக்க வேண்டும், என்று கேப்டன் பிரதீப் பிரேம்குமார் கூறினார்.

மாணவர்கள் ஒரு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தின் பிரதிநிதிகளாக இருந்தாலும், சர்வதேச அரங்கில் அவர்கள் இந்தியாவின் தூதர்களாகவே அறியப்படுவார்கள் என்பதை நினைவுபடுத்திய அவர், தேசபக்தி மற்றும் முதலில் தேசம் என்ற எண்ணத்துடன் செயல்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

பல்வேறு பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன், செயற்கை நுண்ணறிவு (AI), குவாண்டம் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட தொழில்நுட்ப முன்னேற்றங்கள் இன்றைய தலைமுறையை வரையறுக்கின்றன என்று குறிப்பிட்ட அவர், இந்தியாவின் சுயசார்பு இலக்கை நோக்கி தொடர்ந்து புதுமைகளை உருவாக்க மாணவர்களுக்கு ஊக்கமளித்தார்.

தொடக்க காலங்களில் பல உதிரிபாகங்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்ததை நினைவுகூர்ந்த அவர், எதிர்காலத்தில் மிகச் சிறிய போல்ட் முதல் அனைத்து உதிரிபாகங்களும் இந்தியாவில் தயாரிக்கப்படும் முழுமையான உள்நாட்டுமயமாக்கலை மாணவர்கள் சாதிப்பார்கள் என்ற தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

உரையின் நிறைவில், இந்தியாவின் முதல் மாணவர்கள் உருவாக்கிய மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலைக் காணும் வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த கேப்டன் பிரதீப் பிரேம்குமார், டீம் இன்கிராஃப்ட் மற்றும் டீம் சீ சக்தி ஆகிய இரு குழுக்களின் சாதனைகளுக்கு தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

உள்நாட்டுத் தொழில்நுட்ப திறன் மற்றும் தற்சார்பு உற்பத்தி குறித்த இந்த தொலைநோக்குப் பார்வையை ஆதரித்து, நிகழ்ச்சியின் மற்றொரு சிறப்பு விருந்தினரான 6th Element Engineering (6EE), பெங்களூருவின் நிறுவனர் மற்றும் இயக்குநர் திரு. கிரெய்க் மரியோ டி’மெல்லோ உரையாற்றினார்.

மாணவர்கள் உருவாக்கிய நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் பந்தயப் படகுகளின் வெற்றிகரமான தயாரிப்பு மற்றும் அறிமுகத்திற்குத் தேவையான முக்கிய தொழில்நுட்ப ஆதரவை தனது நிறுவனம் வழங்கியதாக அவர் தெரிவித்தார். தனது உரையில், ஒரு சிறிய கேரேஜ் ஸ்டார்ட்அப்பாகத் தொடங்கி விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறையில் செயல்படும் நிறுவனமாக 6th Element Engineering வளர்ந்த பயணத்தைப் பகிர்ந்துகொண்டார். தனது வாழ்க்கைப் பயணத்தை மாணவர்களின் புதுமை முயற்சிகளுடன் ஒப்பிட்டு, இளம் பொறியாளர்கள் சவால்களைத் தைரியமாக எதிர்கொண்டு தொடர்ந்து உழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்தச் சாதனைகளின் கல்வி முக்கியத்துவத்தை எடுத்துரைத்த குமரகுரு கல்வி நிறுவனங்களின் கல்வித் தர உத்தரவாத இயக்குநர் டாக்டர் டி. சரவணன், டீம் சீ சக்தி, மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்சில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக இந்தியாவின் ஒரே பிரதிநிதிக் குழுவாக பங்கேற்று வருகிறது. கல்லூரியின் புதிய குழுவான டீம் இன்கிராஃப்ட்டை அறிமுகப்படுத்திய அவர், உண்மையான நீர்மூழ்கி கப்பலை ஒருபோதும் பார்த்திராமல் மாணவர்கள் ஒரு நீர்மூழ்கி கப்பலை வடிவமைத்து, தயாரித்து, சோதனை செய்ததற்காகப் பாராட்டினார்.

குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரி (KCT) மற்றும் குமரகுரு கலை அறிவியல் கல்லூரி (KCLAS) மாணவர்களால் முழுமையாக வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட நீர்முழ்கிக்கப்பல் மட்டும் மின்சார படகு உலகின் இரண்டு முக்கிய கடல்சார் பொறியியல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தத் தயாராக உள்ளது.

டீம் இன்கிராஃப்ட்:

இந்தியாவின் முதல் மாணவர்கள் உருவாக்கிய மனித சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்து வரலாறு படைத்துள்ள டீம் இன்கிராஃப்ட், இங்கிலாந்தில் ஜூன் 29 முதல் ஜூலை 10, 2026 வரை நடைபெறவுள்ள ஐரோப்பிய சர்வதேச நீர்மூழ்கிக் கப்பல் பந்தயத்தில் (European International Submarine Races – eISR) பங்கேற்க உள்ளது.

உலகின் முன்னணி பல்கலைக்கழக மாணவர் குழுக்கள் பங்கேற்கும் இந்தப் போட்டியில், தண்ணீருக்கு அடியில் , மோட்டார் இல்லாத நீர்மூழ்கிக் கப்பலை மனித சக்தியால் இயக்கி, குறிப்பிட்ட நேரத்திற்குள் சவாலான பாதையை வெற்றிகரமாகக் கடக்க வேண்டும்.

இந்தியாவில் இருந்து இந்தப் போட்டிக்குத் தேர்வான ஒரே கல்வி நிறுவனம் குமரகுரு கல்வி நிறுவனமாகும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சாதனையின் மூலம், சர்வதேச கடல்சார் பொறியியல் போட்டி அரங்கில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமையை டீம் இன்கிராஃப்ட் பெற்றுள்ளது.

ஸ்கூபா (SCUBA) சுவாசக் கருவிகளை அணிந்தபடி, ஒரு மாணவர் பைலட் தனது கால் வலிமையால் பெடலிங் செய்து இந்த கப்பலை இயக்க வேண்டும். ‘டீம் இன்கிராஃப்ட்’ உருவாக்கியுள்ள இந்த நீர்மூழ்கி கப்பலில், பறவைகளின் எலும்புக்கூடு அசைவுகளை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ‘ஸ்விஃப்ட் பேர்ட் (Swift Bird) கட்டுப்பாட்டு அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது தண்ணீருக்கு அடியில் அனைத்து திசைகளிலும் எளிதாகத் திரும்ப உதவுகிறது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, இதன் வெளிப்புற உடல் பகுதி சிப்பித் தூள் (Oyster shell powder) பூச்சைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

டீம் சீ சக்தி: யாலி 5.0 மின்சார பந்தயப் படகு

சர்வதேச அளவில் தொடர்ந்து சாதனை படைத்து வரும் ‘டீம் சீ சக்தி’ (Team Sea Sakthi) குழுவினர், தங்களது ஐந்தாம் தலைமுறை மின்சார பந்தயப் படகான ‘யாலி 5.0’ (Yali 5.0) ஐ அறிமுகப்படுத்தியுள்ளனர். இக்குழுவினர், வரும் ஜூலை 08 முதல் ஜூலை 11, 2026 வரை நடைபெறவுள்ள மொனாக்கோ எனர்ஜி போட் சேலஞ்ச் (MEBC 2026) போட்டியில் பங்கேற்க உள்ளனர். 2022-ஆம் ஆண்டு முதல் சர்வதேச அரங்கில் பங்கேற்று வரும் இக்குழுவினர் தொடர்ந்து உலகளவில் 6-வது இடத்தைத் தக்கவைத்துக்கொண்டு, மொனாக்கோ டவுன்ஹால் கோப்பை மற்றும் பல்வேறு கண்டுபிடிப்பு விருதுகளை வென்று சாதனை படைத்துள்ளனர். இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ஆற்றல் மூலம் இயங்கும் கேடமரன் படகு மற்றும் இயற்கை நார் கட்டமைப்புகளை உருவாக்கிய பெருமை இவர்களுக்கு உண்டு.

இந்த ஆண்டின் ‘யாலி 5.0’ படகானது, இவர்களது முந்தைய மாடல்களை விட மிகவும் மேம்பட்டதாகும். இதில், வீணாகும் சுழற்சி ஆற்றலை மீட்டெடுத்து அதிக உந்துவிசையைத் தரும் ‘கான்ட்ரா-ரோடேட்டிங் பிரொபல்ஷன்’ (Contra-rotating propulsion) தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், பேட்டரியின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தும் பிரத்யேக ‘ஃபேஸ் சேஞ்ச் மெட்டீரியல்’ (PCM) தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன ஏரோடைனமிக்ஸ் வடிவமைப்பு ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளதால், இம்முறை இக்குழுவினர் உலக மேடையில் பதக்கத்தை வெல்வார்கள் என்ற பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளின் உலகின் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து குமரகுரு மாணவர்கள் இந்த சர்வதேசப் போட்டிகளில் களம் காண்பது அவர்களுக்கு ஒரு சிறந்த உலகளாவிய அனுபவமாக அமையும். வகுப்பறை கற்றலைத் தாண்டி, நிஜ உலக கடல்சார் சவால்களுக்குத் தீர்வுகாணும் வகையில் கடினமான பொறியியல் நுணுக்கங்களை மாணவர்கள் இந்த திட்டங்கள் மூலம் கற்றுக்கொண்டுள்ளனர். இந்த தனித்துவமான பயணமானது மாணவர்களின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இந்தியாவில் தூய்மையான கடல்சார் போக்குவரத்துத் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் தொலைநோக்குத் தலைவர்களாக அவர்களை உருவாக்குவதற்கும் ஒரு சிறந்த தளமாக அமைந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *