நாகப்பட்டினம்,ஜூன்.12-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சி தெற்குலேறி கிராமத்தில் உள்ள முடிகொண்டான் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள நீர்த்தேக்க அணையில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர்
மற்றும் விவசாயிகள் கழுத்தில் தூக்கு கயிறுடன் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் விஜயராஜ் தலைமை தாங்கினார். கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டு குறுவை சாகுபடிக்கு உடனடியாக மேட்டூர் அணையை திறக்க வேண்டும், கர்நாடக அரசிடம் பேசி தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை பெற வேண்டும், தண்ணீர் இன்றி கருகும் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பினர்.