மணலி, ஜூலை 28:
மணலி மாநகராட்சி மண்டல அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆதார் சேவை மையத்தில் பணியாளர்கள் குறிப்பிட்ட நேரத்தில் பணிக்கு வராததால், காலை முதலே காத்திருந்த பொதுமக்கள் ஆத்திரமடைந்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டு அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஆதார் அட்டையில் முகவரி மாற்றம், பெயர் திருத்தம், புதிய ஆதார் பதிவு, குழந்தைகளுக்கான ஆதார் பதிவு, விவரங்கள் சேர்த்தல் உள்ளிட்ட சேவைகளைப் பெறுவதற்காக முதியவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் அதிகாலை 5 மணி முதலே மையம் முன்பு காத்திருந்தனர். ஆனால், காலை 10 மணி ஆகியும் பணியாளர்கள் யாரும் வராததால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.
குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட வேண்டிய ஆதார் மையத்தில் பணிகள் தொடங்கப்படாததாலும், முறையான முன்னறிவிப்பு எதுவும் வழங்கப்படாததாலும், நீண்ட நேரம் காத்திருந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
மேலும், நாளொன்றுக்கு 30 டோக்கன்கள் மட்டுமே வழங்கப்படுவதாகவும், இதன் காரணமாக சிறிய ஆதார் திருத்தப் பணிக்குக் கூட பல முறை அலைய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். மையத்தின் செயல்பாடுகள் குறித்து முறையான தகவல் தெரிவிக்கப்படாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த பிரச்சினையில் மாவட்ட நிர்வாகமும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக தலையிட்டு, ஆதார் சேவை மையங்களில் போதுமான பணியாளர்களை நியமித்து, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மேலும், “ஆட்சிகள் மாறினாலும் அரசு அலுவலகங்களில் நிலவும் அலட்சியமான செயல்பாடு மாறவில்லை. அரசு ஊழியர்களுக்கு சம்பளம் முறையாக கிடைக்கிறது; ஆனால் பொதுமக்களுக்கான சேவை மட்டும் தாமதமாகிறது” என ஆதங்கத்துடன் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.