நாகப்பட்டினம்,ஜூன்.13-
திருமருகலில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் நிழலகம் அமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.ஆக்கிரமிப்பு காரணமாக பேருந்து, அவசர ஊர்தி செல்ல சிரமமும் ஏற்பட்டுள்ளது
பயணிகள் நிழலகம்
நாகை மாவட்டம் திருமருகல் சந்தை பேட்டை கடைத்தெருவில் நாகை நாடாளு மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் உயர் மட்ட பயணிகள் நிழலகம் அமைக்கும் பணிக்கு கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. அடிக்கல் நாட்டப்பட்டு 10 மாதங்களை கடந்தும் போதிய இடவசதி இன்றி பணிகள் தொடங்கப்படாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த மே மாதம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹரிகிருஷ்ணன், ராமலிங்கம் ஆகியோர் தலைமையில் உயர்மட்ட பயணிகள் நிழலகம் அமைக்கும் இடத்தை தேர்வு செய்து அந்த இடத்தில் கட்டுமான பணிகளை தொடங்கவும், கட்டுமான பணிகளுக்கு இடையூறாக உள்ள கடைகளை தாமாக அகற்றிக்கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் இருப்பதாலும், கட்டுமான பணிகளுக்கு போதிய இடவசதி இல்லாத காரணத்தாலும் பயணிகள் நிழலகத்தை திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் எதிரில் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், வர்த்தக சங்கத்தினர், நோயாளிகள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் வலியுறுத்தி வருகின்றனர்.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடன் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி பயணிகள் நிழலகம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து காத்துள்ளனர்.