புதுச்சேரி, ஜூன் 13:
புதுவை அரசு செவிலியர் சங்கத்தின் (PGNA) சார்பில் ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் பணியிட காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி வாயிற் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய சங்க நிர்வாகிகள், தங்களது கோரிக்கைகள் தனிப்பட்ட நலன்களுக்காக அல்ல என்றும், மருத்துவமனையின் வளர்ச்சி, நோயாளிகளின் பாதுகாப்பு மற்றும் தரமான சுகாதார சேவையை உறுதி செய்வதற்காகவே இந்தக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தனர்.
ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தற்போது 30 Nursing Officer, 5 Senior Nursing Officer, 1 Deputy Nursing Superintendent (DNS) மற்றும் 1 Assistant Nursing Superintendent (ANS) பணியிடங்கள் காலியாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது. இதன் காரணமாக பணியில் உள்ள செவிலியர்கள் கூடுதல் பணிச்சுமை மற்றும் மன அழுத்தத்துடன் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ற வகையில் புதிய செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படாததோடு, ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களும் நிரப்பப்படாமல் இருப்பது சுகாதார சேவையின் தரத்தை பாதிப்பதாக சங்கம் கவலை தெரிவித்தது.
இதையடுத்து, சுகாதாரத் துறையில் நிலுவையில் உள்ள 110 Nursing Officer காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என அரசையும், சுகாதாரத் துறையையும் வலியுறுத்தினர்.
அத்துடன்,
கடந்த 5 ஆண்டுகளாக காலியாக உள்ள 5 Deputy Nursing Superintendent (DNS) பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
9 Assistant Nursing Superintendent (ANS) காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
25 Senior Nursing Officer பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.
ஆட்சேர்ப்பு மற்றும் பதவி உயர்வு நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.
என வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கோரிக்கைகள் அனைத்தும் நோயாளிகளின் நலன் மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்ட நியாயமான கோரிக்கைகள் என்றும், அரசு உடனடியாக தலையிட்டு அனைத்து காலிப்பணியிடங்களையும் நிரப்பி செவிலியர் பற்றாக்குறையை நீக்கி சுகாதார சேவையை வலுப்படுத்த வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வாயிற் கூட்டத்தில் புதுவை அரசு செவிலியர் சங்கத்தின் தலைவர் R. நிர்மலா, பொதுச் செயலாளர் V. அரிகரன், பொருளாளர் N. கோபாலகிருஷ்ணன், ஆலோசகர் G. சாந்தி ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
மேலும், புதுவை மாநில அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் P. லட்சுமணசாமி மற்றும் தலைவர் A. வெங்கடேசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை J. பிரபா, R. லட்சுமி, B. அசோக், G. விஜயபாரதி, A. சுமித்ரா, S. கல்பனா உள்ளிட்டோர் மற்றும் புதுவை அரசு செவிலியர் சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.
இந்த வாயிற் கூட்டத்தில் 60-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
“வலுவான செவிலியர் படை – வலுவான சுகாதார சேவை”
“நோயாளி நலனுக்காக ஒன்றிணைவோம் – செவிலியர் உரிமைக்காக குரல் கொடுப்போம்” என உறுதிமொழியுடன் கூட்டம் நிறைவடைந்தது.