தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் ‘இது நம்ம இயக்கம்’ ஆலோசனைக் கூட்டம்: சாமானியர்களுக்கான அரசியல் என முன்னாள் ஊராட்சி தலைவர் சண்முகம் பேச்சு!
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், கே. அண்ணாமலையின் ‘இது நம்ம இயக்கம்’ (Be The Leader / We The Leaders) அமைப்பின் உறுப்பினர் சேர்க்கை மற்றும் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் உடுமலை ரோட்டில் உள்ள லயன்ஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஓடந்துறை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் சண்முகம் தலைமை தாங்கி, இயக்கத்தின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விரிவாக உரையாற்றினார்.
கூட்டத்தில் சண்முகம் பேசியதாவது:
பாஜகவில் இருந்து விலகிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி கே. அண்ணாமலை, சாமானிய மக்களுக்காக ‘இது நம்ம இயக்கம்’ என்ற புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார். வாரிசு அரசியல் மற்றும் பண பலம் கொண்ட அரசியல் கலாசாரத்தைத் தவிர்த்துவிட்டு, சாதாரண மக்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களை அரசியலில் முன்னிலைக்குக் கொண்டு வருவதே இந்த இயக்கத்தின் முதன்மைக் குறிக்கோளாகும்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாமின் அறநெறி மற்றும் கொள்கைகளை அடித்தளமாகக் கொண்டு இந்த இயக்கம் செயல்படும். இதற்காகக் கோவையில் உள்ள ‘அப்துல் கலாம் அறநெறி மற்றும் அரசியல் மையத்தின்’ மூலமாக, இளைஞர்களுக்குத் தூய்மையான அரசியலுக்கான பயிற்சிகள் வழங்கப்படும்.
புதிய அரசியல் இலக்கணம்:
“எந்தவொரு தலைவரோ, எம்பியோ அல்லது எம்எல்ஏ-வோ நிரந்தரமாக ஒரே பதவியில் நீடிக்கக் கூடாது என்ற புதிய அரசியல் இலக்கணத்தை இந்த இயக்கம் தமிழகத்தில் உருவாக்கும்.”
இந்த இயக்கம் மிக விரைவில் முழுமையான அரசியல் கட்சியாக மாற்றப்பட்டு, தமிழகத்தின் அடுத்த பொதுத் தேர்தல்களில் தார்மீக பலத்துடன் போட்டியிடும் என்று அவர் தனது உரையில் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் தாராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் திரளாகக் கலந்துகொண்டனர்.