காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம் அருகே பார் உரிமையாளருக்கு கத்திக் குத்து: 4 பேர் கைது.
காங்கயம் அருகே, தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில், பார் உரிமையாளரைத் தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மருதமுத்து (40), பார் உரிமையாளர். பார் பணியாளர் ஜாபர் சாதிக் (55). இவர்கள் காங்கயம் அருகே, சம்பந்தம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடை அருகே பார் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த பார் செயல்படாமல் பூட்டி வைத்துள்ளனர். இதனால் இரவு காவலுக்கு மருதமுத்து, ஜாபர்சாதிக் ஆகிய இருவரும் இருந்துள்ளனர்.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் மதுபோதையில் பாருக்கு வந்த நான்கு பேர் மருதமுத்து, சாதிக் ஆகிய இருவரிடம் மதுவில் கலந்து குடிக்க தண்ணீர் கேட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது ஜாபர் சாதிக், மருதமுத்து ஆகிய இருவருக்கும், மதுபோதையில் வந்த நான்கு பேருக்கும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
இதில் மருதமுத்துவின் இடது கால் மற்றும் மார்பு பகுதியில் கத்தியால் குத்திவிட்டு, அந்த மர்ம நபர்கள் தப்பியோடியுள்ளனர். உடனே படுகாயமடைந்த மருதமுத்து காங்கயம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, பின்னர், திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருதமுத்துவின் புகாரின் அடிப்படையில் ஊதியூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில், காங்கயம் அடுத்த காடையூர் பகுதியைச் சேர்ந்த வலுப்பூரான் (65), இவரது மகன் கார்த்தி (35), இதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (35), முத்துக்குமார் (25) ஆகிய நான்கு பேர் தகராறில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதில், வலுப்பூரான் என்பவர், தான் வைத்திருந்த கத்தியால் மருதமுத்துவை குத்தியதாகக் கூறப்படுகிறது.