இந்திய குடியரசுத் தலைவரிடம் இருந்து கீர்த்தி சக்ரா விருது பெற்ற வீரர் லான்ஸ் நாயக் என்ற அ.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு தேனி மாவட்டம் கம்பம் நாலந்தா இன்னோவேஷன் பள்ளியின் சார்பில் சிறப்பான மரியாதை செய்யப்பட்டு ஊர்வலமும் பாராட்டு விழாவும் நடைபெற்றது.
கம்பம் தம்பீஸ் திரையரங்கில் தொடங்கி ஊர்வலம் நகரின் பிரதான வழியாக காந்தி சிலை வரை சென்ற மரியாதை ஊர்வலத்திற்கு நாலந்தா இன்னோவேஷன் பள்ளியின் தாளாளர் முனைவர் டாக்டர் வி.கே.ஜி. விஸ்வநாதன் தலைமை தாங்கினார். ஊர்வலத்தில் பள்ளியின் 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் பள்ளியின் இருபால் ஆசிரியர்கள்
கலந்து கொண்டனர் இந்த ஊர்வலத்தில் சென்ற மாணவர்கள் “ஜெய் ஹிந்த்” என்ற முழக்கங்களை எழுப்பியபடி, பேண்டு வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக சென்றது அப்பகுதியில் தேசப்பற்றை உணர்த்தும் வகையில் அமைந்தது.
ஊர்வலத்திற்கு கம்பம் வடக்கு மற்றும் தெற்கு காவல் நிலையங்களின் சார்பில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
ஊர்வலத்தைத் தொடர்ந்து பள்ளி வளாகத்தில் உள்ள ஆடிட்டோரியத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் லான்ஸ் நாயக் அ.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு பள்ளி தாளாளரால் பொன்னாடை அணிவிக்கப்பட்டு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. விழாவில் பேசிய லான்ஸ் நாயக் கீர்த்தி சக்ரா அ.மீனாட்சிசுந்தரம் அவர்கள், “மாணவர்கள் கல்வியில் மட்டுமல்லாது தங்களுக்குள் மறைந்திருக்கும் தனித்திறமைகளைக் கண்டறிந்து அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையில் உயரிய இலக்குகளை இளமையிலேயே நிர்ணயித்து, அதனை அடைவதற்காக நேர்மையுடனும் கடின உழைப்புடனும் செயல்பட வேண்டும். எந்தச் சூழலையும் மனத் தைரியத்துடன் எதிர்கொள்ளும் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டு போகாமல், அவற்றை வெற்றிக்கான படிக்கட்டுகளாக மாற்றிக் கொள்ள வேண்டும். பெற்றோர்களையும் ஆசிரியர்களையும் மதித்து அவர்களின் வழிகாட்டுதலின்படி செயல்பட வேண்டும்” என்று மாணவர்களுக்கு கருத்துள்ள விஷயங்களை அறிவுறுத்தி பேசினார்
மேலும், வாழ்நாள் முழுவதும் எதற்காகவும் யாருக்கும் லஞ்சம் கொடுக்கக் கூடாது. நேர்மையும் ஒழுக்கமும் மனிதனை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும். மாணவர்கள் தங்களைச் சார்ந்த சமுதாயத்திற்கு பயனுள்ளவர்களாக தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இந்திய நாட்டின் மீது அன்பும், தேசப்பற்றும், இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வும் ஒவ்வொரு இளைஞரிடமும் வளர வேண்டும். நாட்டின் பாதுகாப்பிற்காக செயல்படும் இராணுவம், கடற்படை, விமானப்படை உள்ளிட்ட துறைகளில் அதிகமான இளைஞர்கள் பங்கேற்று நாட்டிற்காக சேவை செய்ய முன்வர வேண்டும். தன்னம்பிக்கை, துணிச்சல் மற்றும் விடாமுயற்சி இருந்தால் எந்த இலக்கையும் அடைய முடியும்” என்றும் அவர் வலியுறுத்திப் பேசினார்.
விழாவில் சிறப்புரையாற்றிய பள்ளியின் தாளாளர் முனைவர் டாக்டர் வி.கே.ஜி. விஸ்வநாதன் பேசும்போது நாட்டிற்காக உயிரையும் பணயம் வைத்து சேவையாற்றிய வீரர்களை மாணவர்கள் முன்மாதிரியாகக் கொண்டு வளர வேண்டும் என்றும், லான்ஸ் நாயக் அ.மீனாட்சிசுந்தரம் அவர்களின் சாதனை ஒவ்வொரு மாணவரின் மனதிலும் தேசப்பற்றை விதைக்கும் என்றும் கூறினார்.
துணை முதல்வர் மலர்விழி தனது சிறப்புரையில், “இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் இளைஞர்களின் எழுச்சி நாயகனுமான டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள் கனவு காணுங்கள், அந்தக் கனவை இலக்காக மாற்றுங்கள் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தினார். அதேபோன்று, லான்ஸ் நாயக் கீர்த்தி சக்ரா அ.மீனாட்சிசுந்தரம்
தனது துணிச்சல், அர்ப்பணிப்பு மற்றும் தேசப்பற்றின் மூலம் இன்றைய தலைமுறைக்கு ஒரு வாழும் முன்மாதிரியாக திகழ்கிறார். அப்துல் கலாம் அவர்கள் அறிவியல் துறையில் இந்தியாவின் பெருமையை உலகிற்கு எடுத்துக்காட்டியதுபோல், மீனாட்சிசுந்தரம் அவர்கள் நாட்டின் பாதுகாப்புத் துறையில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளார். மாணவர்கள் அப்துல் கலாமின் கனவுகளையும், மீனாட்சிசுந்தரத்தின் வீரத்தையும் தங்களது வாழ்க்கையில் பின்பற்றி உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.
மேலும், கல்வியுடன் சேர்ந்து ஒழுக்கம், பொறுப்புணர்வு, நாட்டுப்பற்று மற்றும் மனிதநேயத்தை வளர்த்துக் கொண்டால் மட்டுமே ஒரு முழுமையான குடிமகனாக உருவாக முடியும் என்றும், மீனாட்சிசுந்தரம் போன்ற வீரர்களின் வாழ்க்கைப் பயணம் மாணவர்களுக்கு மிகப்பெரிய உத்வேகமாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் மோகன், துணை முதல்வர் மலர்விழி, மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பெற்றோர்களும், மாணவர்களும் லான்ஸ் நாயக் அ.மீனாட்சிசுந்தரம் அவர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்கள்.
.
இந்த விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளி அலுவலக மேலாளர் வி.எல்.விக்னேஷ் வெகு சிறப்பாக செய்து விழாவில் பங்கேற்ற அனைவரையும் கனிவுடன் உபசரித்தார்