திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் மகாத்மா காந்திக்கு அனுப்பப்பட்ட அஞ்சல் உறைகள் குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.நிறுவனர் நாசர், ஜலால், பிரேம்குமார், இளம்வழுதி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

சங்க தலைவர் அஞ்சல் தலை சேகரிப்பாளர் லால்குடி விஜயகுமார் பேசுகையில்,மகாத்மா காந்திக்கு அனுப்பப்பட்டஅஞ்சல் உறைகள், இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகின்றன. இவை மகாத்மா காந்தியடிகளுக்கு நேரடியாக “Birla House, New Delhi” என்ற முகவரியில் அனுப்பப்பட்ட அஞ்சல் உறைகளாகும். அன்றைய காலகட்டத்தில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் வெளிநாட்டவர்களும் காந்தியடிகளுக்கு இம்முகவரியிலேயே கடிதங்களை அனுப்பி வந்தனர். இந்த அஞ்சல் உறை ஜார்ஜ் VI (King George VI) உருவம் பொறிக்கப்பட்ட இந்திய அஞ்சல் உறை (Postal Stationery Envelope) ஆகும்.
அஞ்சல் உறையின் மேல் வலது மூலையில் “ONE AND A HALF ANNAS INDIA POSTAGE” என்று அச்சிடப்பட்டுள்ளது.அதன் நடுவில் மன்னர் ஜார்ஜ் VI-ன் இடப்பக்க முகப்புத் தோற்றம் (profile portrait) பொறிக்கப்பட்டுள்ளது.இந்த வகை அஞ்சல் உறைகள் பிரிட்டிஷ் இந்தியா காலத்தில் (1937–1947), ஜார்ஜ் VI ஆட்சிக் காலத்தில் இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டவை ஆகும்.இந்த அஞ்சல் உறைகளில் தனியாக தபால்தலை ஒட்ட வேண்டிய அவசியமின்றி, அஞ்சல் கட்டணம் செலுத்தப்பட்ட உறையாகவே இவை பயன்படுத்தப்பட்டன. அக்காலத்தில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்திய அஞ்சல் வசதிகளில் இதுவும் ஒன்றாகும். ஒரு அஞ்சல் உறையின் முகவரியில் “Shriman Mahatma Gandhi Ji, Birla House, New Delhi” என்று கையெழுத்தில் எழுதப்பட்டுள்ளது. இரண்டாவது உறையில் “Air Mail” என்று குறிப்பிடப்பட்டு, “Mahatma M. K. Gandhi, Birla House, Queensway, New Delhi” என முகவரி எழுதப்பட்டுள்ளது. “Queensway” என்பது இன்றைய Janpath பகுதியின் பழைய பெயராகும். இதன் மூலம் அந்தக் காலத்து டெல்லி நகர முகவரி முறையையும் அறிய முடிகிறது.
இரண்டு உறைகளிலும் அனுப்பிய அஞ்சல் நிலையத்தின் முத்திரை (Dispatch Postmark) மற்றும் டெல்லி வந்தடைந்த பிறகு பதிக்கப்பட்ட வருகை முத்திரை (Arrival Mark) காணப்படுகின்றன. பின்புறத்தில் பதிக்கப்பட்டுள்ள வட்ட வடிவ NEW DELHI DELIVERY முத்திரைகள், உறைகள் இலக்கை அடைந்ததை உறுதிப்படுத்தும் அஞ்சல் சான்றுகளாகும். அவை 1940-களின் இந்திய அஞ்சல் நடைமுறையை வெளிப்படுத்துகின்றன.
இந்த உறைகளில் காணப்படும் அஞ்சல் முத்திரைகள், அக்கால அஞ்சல் போக்குவரத்து முறையை ஆய்வு செய்வதற்கு மிகவும் பயனுள்ளவை. அஞ்சல் எந்த நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது, எந்த வழியாக டெல்லி சென்றது, எப்போது பெறப்பட்டது போன்ற தகவல்களை தபாலியல் ஆய்வாளர்கள் இம்முத்திரைகள் மூலம் அறியலாம்.பிர்லா ஹவுஸ் இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான இடமாகும். மகாத்மா காந்தியடிகள் தனது வாழ்நாளின் இறுதி மாதங்களை இங்குதான் கழித்தார். தினசரி பிரார்த்தனைக் கூட்டங்கள் நடைபெற்றதும், நாட்டின் முக்கிய தலைவர்களைச் சந்தித்ததும், 1948 ஜனவரி 30 அன்று அவர் படுகொலை செய்யப்பட்டதும் இதே வளாகத்தில்தான். தற்போது இது காந்தி ஸ்மிருதி நினைவகமாகப் பாதுகாக்கப்பட்டு வருகிறது.தபாலியல் சேகரிப்பாளர்களின் பார்வையில், பெறுநர் மகாத்மா காந்தி என்பதே மிகப்பெரிய சிறப்பாகும். அதோடு, அஞ்சல் உறையின் முழுமை, தெளிவான அஞ்சல் முத்திரைகள், கிழிவுகள் இல்லாத நிலை அஞ்சல் தலை சேகரிப்பாளர்களுக்கு, சிறப்பானதாகும் . அஞ்சல் உறையில் கடிதம், அனுப்புநரின் விவரங்கள் போன்றவை அதன் வரலாறு கடிதம் மூலம் மட்டுமே அறிய முடியும் கடிதம் மகாத்மா காந்தி அலுவலகத்தில் இருக்கலாம்.
இந்த அஞ்சல் உறைகள் வெறும் பழைய தபால் பொருட்கள் அல்ல. இந்திய விடுதலைப் போராட்டத்தின் நினைவுகளையும், மகாத்மா காந்தியுடன் மக்களின் தொடர்பையும், அன்றைய இந்திய அஞ்சல் துறையின் செயல்திறனையும் பதிவு செய்திருக்கும் வரலாற்றுச் சான்றுகளாகும். இந்த அஞ்சல் உறையானது மகாத்மா காந்தி படுகொலை செய்வதற்கு மூன்று நாட்கள் முன்பு வந்த ஒரு அஞ்சல் உறை மற்றொன்று இரண்டு நாட்களுக்கு முன்பு வந்த அஞ்சல் உறை ஆகும் என்றார்.