கோவை
பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி, விளையாட்டு உபகரணங்கள் உதவி – பெண் சமூக ஆர்வலரின் நெகிழ்ச்சி செயல் !
கோவை மாவட்டம் ஆனைக்கட்டி மலைப்பகுதியில் உள்ள கோபனாரி பழங்குடியினர் கிராமத்தில் இயங்கி வரும் நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, இளம் தொழிலதிபரும் விவசாயியுமான சமூக ஆர்வலர் உமா மகேஷ்வரி என்பவர் நெஞ்சார உதவிக்கரம் நீட்டியுள்ளார். தனது தோட்டத்திற்குச் செல்லும் வழியில் இப்பள்ளியைக் கடந்து சென்ற உமா மகேஷ்வரி, அங்கு பயிலும் மாணவ மாணவிகளுக்கு அத்தியாவசிய தேவைகள் இருப்பதனை அறிந்துள்ளார்.
இப்பள்ளியில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய சூழலில் உள்ள பழங்குடி சமூக குழந்தைகள் பெருமளவில் படிக்கின்றனர். இக்குழந்தைகளின் நிலையை உணர்ந்து, இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் தேவையான நோட்டுப் புத்தகங்கள் மற்றும் கிரிக்கெட் மட்டை, பந்துகள், ஸ்டம்ப்புகள், கைப்பந்துகள், கால் பந்துகள், எறி பந்துகள், டெனிகாய்டு,செட்டில் கார்க் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களை நேரில் சென்று வழங்கினார். இதுகுறித்து பேசிய உமா மகேஷ்வரி, “பழங்குடியின கிராமப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற உதவிகள் மிகவும் அவசியம் என்றும் குழந்தைகளின் கல்வி மேம்பாடு மட்டுமே அவர்களின் ஒட்டுமொத்த தலைமுறையையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவும் எனவும் தெரிவித்தார்.
பழங்குடிகள் வாழ்வியல் வளம் பெற, பழங்குடி குழந்தைகளின் கல்விக்கு தொடர்ந்து உதவதாக தெரிவித்த அவர், கல்வியே தலைனுறைகளை காக்கும் ஆயுதம் என்றார் . அதன் அடிப்படையில், பழங்குடிகள் தலைமுறை செழிக்க கல்வி அவசியம் என்றும் அதற்கு தொடர்ந்து உதவுவதாக சமூக ஆர்வலரான உமா மகேஷ்வரி தெரிவித்தார். பொருளாதாரச் சுமையால் தவித்த தங்களுக்கு, தேடி வந்து உதவிய சமூக ஆர்வலர் உமா மகேஷ்வரியின் இந்த நற்செயலுக்கு, பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பழங்குடியினப் பெற்றோர்கள் தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.