நாகப்பட்டினம்,ஜூன்.21-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரி ஊராட்சி மத்தியக்குடி கிராமத்தில் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் ஆண்டு திருவிழா ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக நடைப்பெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஆலயத்தில் திருப்பாலி நடைப்பெற்று வந்தது.
ஆண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மின் அலங்கார தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைப்பெற்றது. வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரங்களில் புனித சம்மனசு, புனித ஆரோக்கிய மாதா, புனித அந்தோணியார் ஆகியோர் எழுந்தருளினர். முன்னதாக நாகூர் பங்கு தந்தை சேவியர் நத்தானியேல் தலைமையில் கூட்டு பாடல், திருப்பலி நடைப்பெற்றது.
பின்னர் தேரினை புனிதம் செய்து தொடங்கி வைத்தார். ஆலய வளாகத்தில் இருந்து இசை வாத்தியங்கள் முழங்க தேர் பவனி தொடங்கியது. பவனியானது கண்கவர் வான வேடிக்கைகளோடு முக்கிய வீதிகளில் வலம் வந்தது.
தேர்பவனியின் போது ஒவ்வொரு வீடுகளிலும் கிருஸ்தவர்கள் கைகளில் மெழுவர்த்தி ஏந்தி தேரினை வரவேற்று புனித சம்மனசு, புனித ஆரோக்கிய மாதா, புதின அந்தோணியார்க்கு மாலை அணிவித்து சாம்பிராணி காட்டி மனமுருகி பிரார்த்தனை செய்தனர்.
விழாவினை மத்தியக்குடி கிராமமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். தொடர்ந்து நேற்று காலை நாகூர் பங்கு தந்தை சேவியர் நத்தானியேல் திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருக்கொடி இறக்கப்பட்டது.