எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தனியார் கூட்டுறங்கில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் கூறியதாவது
தமிழக அரசு தாக்கல் செய்துள்ள பொது பட்ஜெட்டில் விவசாயம் மற்றும் நீர்வளத்துறைக்கு செய்யப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளை வரவேற்பதாகபி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மேலும், நாளை தாக்கல் செய்யப்படவுள்ள வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்புகள் குறித்தும்
தெரிவித்தார்.
தமிழக அரசின் பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வையோடு நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக நீர்வளப் பாசனத்துறைக்கு ₹9,264 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
”தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றிருக்கிற அரசு, தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தொலைநோக்குப் பார்வையோடு நிதி ஒதுக்கீடுகளைச் செய்துள்ளது. குறிப்பாக நீர்ப்பாசனத் துறைக்கு ₹9,264 கோடி நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். கொள்ளிடம் – காவிரி ஆறுகளில் கதவணைகள் மற்றும் தடுப்பணைகள் அமைப்பதை ஆய்வு செய்வதற்காக முதற்கட்டமாக ₹10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.தொடர்ந்து பேசிய அவர், கிராமப்புற பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் கறவை மாடுகள் வழங்கும் திட்டம் மற்றும் நீர் மேலாண்மைத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டிருப்பதைப் பாராட்டினார்.
”கிராமப்புற பெண்களுக்கு ஆடுகள் வளர்ப்பதற்கு ₹110 கோடியும், கறவை மாடுகள் வழங்கி பால் உற்பத்தியைப் பெருக்குவதற்கு ₹10,000 கோடியும் ஒதுக்கீடு செய்திருக்கிறார்கள். இது கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், நீர் மேலாண்மையை ஊக்கப்படுத்தவும் உதவும். காவிரி – குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ₹150 கோடி, அலையாத்தி காடுகளை வளர்ப்பதற்கு ₹1,732 கோடி எனப் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.”
நாளை தாக்கல் செய்யப்படவுள்ள தனி வேளாண் பட்ஜெட்டில், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் கடன் தள்ளுபடி மற்றும் பயிர்களுக்கான ஆதரவு விலை குறித்த அறிவிப்புகள் இடம் பெற வேண்டும் என்று விவசாயிகள் எதிர்ப்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
”நாளை வரவிருக்கும் வேளாண் பட்ஜெட்டில், தேர்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் சிறு-குறு விவசாயிகளுக்கு 100% கடன்களும், பெரு விவசாயிகளுக்கு 50% கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பு வெளியாகும் என நம்புகிறோம். அதேபோல், நெல் குவிண்டால் ஒன்றுக்கு ₹3,500, கரும்பு டன் ஒன்றுக்கு ₹4,500 என கொள்முதல் விலை அறிவிக்கப்படும் என்கிற எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம்.”
வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற பெரும் எதிர்பார்ப்பில் தமிழக விவசாயிகள் காத்திருப்பதாக பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.