வேளாண் மாணவர் மாணவியருக்கான காணொளி தயாரிப்பு மற்றும் கேமரா கையாளுதல் குறித்த செய்முறை ஊடகவியல் பயிற்சி

புதுச்சேரி ஒன்றியப் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டம், செருமாவிலங்கை கிராமத்தில் அமைந்துள்ள புதுச்சேரி அரசின் கல்வி நிலையமான பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறைகளில் இளங்கலை, முதுகலை மற்றும் முனைவர் பட்டப்படிப்புகளை வழங்கி வருகிறது.

கல்வித் திறன்களுடன் மட்டுமல்லாமல், சமூகத்தில் நிகழும் நவீன முன்னேற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களைத் தொழில்முறை திறன்களுடன் உருவாக்குவதிலும் இக்கல்லூரி சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், விவசாயிகளுக்கும் பொது மக்களுக்கும் பயனுள்ள தகவல்களை திறம்பட விரிவாக்கம் செய்யும் பண்புகளை வளர்க்கும் நோக்கில் வேளாண் ஊடகவியல் என்ற பாடமும் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஊடகவியலை விருப்பப் பாடமாக 20 மாணவிகளும் 2 மாணவர்களும் தேர்வு செய்துள்ளனர்.

இப்பாடத்தின் ஒரு பகுதியாக, காணொளி தயாரிப்பு, கேமரா கையாளுதல் மற்றும் ஊடகவியலின் பல்வேறு அம்சங்களை அவர்கள் கற்று வருகின்றனர்.

இதற்காக மாணவர்களுக்கு நேரடி செயல்முறை அனுபவத்தை வழங்கும் நோக்கில், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கான சன் தொலைக்காட்சி செய்தியாளர் திரு. சகாதேவன் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்து, செய்தி சேகரிப்பு மற்றும் காணொளி தயாரிப்பில் பயன்படுத்தப்படும் ஐந்து வகை நவீன தொழில்நுட்ப கேமராக்களை மாணவர் மாணவியருக்கு அறிமுகப்படுத்தினார். மேலும், பல்வேறு வகையான மைக்ரோஃபோன்களையும், கேமரா மின்னொளிகளையும் காட்சிப்படுத்தி அவற்றின் பயன்பாடுகள் குறித்து விளக்கமளித்தார்.

அவருடன் வருகை தந்த தனியார் ஒளிப்பதிவாளர் திரு. எஸ். பார்விஷ் கான், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயங்கும் எதிர்கால கேமராக்கள் குறித்து மாணவர் மாணவியரிடம் எடுத்துரைத்தார்.

மேலும், திருவாரூரில் அமைந்துள்ள மத்தியப் பல்கலைக்கழகத்தில் டிஜிட்டல் பத்திரிகையியல் பயிலும் மற்றும் ஒரு மாதகால பயிற்சிக்காக செய்தியாளர் திரு. சகாதேவனுடன் இணைந்திருந்த பயிற்சி மாணவர் திரு. நிதீஷ், தனது அனுபவங்களை மாணவர் மாணவியருடன் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிக்கு வேளாண் ஊடகவியல் பாட ஆசிரியரும் இணைப் பேராசிரியருமான முனைவர் எஸ். ஆனந்த்குமார் தலைமை வகித்தார். அப்போது அவர் பேசுகையில், “பஜன்கோவா மாணவர்கள் எதிர்கால உலகின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ளக் கூடிய சிறந்த திறனாளர்களாக உருவாக வேண்டும் என்பதற்காக நேரடி மற்றும் நோக்கமுள்ள கற்றல் அனுபவங்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. இந்தப் பயிற்சியும் அதற்கான ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்” என்றார்.

இப்பயிற்சி நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் ஆர். சங்கர் அவர்களின் ஒப்புதலுடன் ஏற்பாடு செய்யப்பட்டது.

பயிற்சியின் போது, வளாகத்திற்குள் பறந்து வகுப்பின் காட்சிகளைப் பதிவு செய்த ட்ரோன் கேமராவை கண்டு மாணவர் மாணவியர் ஆச்சரியமடைந்தனர். மேலும், நீருக்கடியில் உள்ள பொருட்களையும் பதிவு செய்யக்கூடிய ஆக்ஷன் கேமராவின் செயல்பாடுகளும் மாணவர்களை வெகுவாக கவர்ந்தன.

பயிற்சியின் ஒரு பகுதியாக, “பஜன்கோவாவில் மரங்களின் முக்கியத்துவம்” என்ற தலைப்பில் காணொளி தயாரிக்கும் பரீட்சைப் பணியை மாணவர்களுக்கு வழங்கினர். அவர்கள் தயாரித்த காணொளிகள் ஒளிப்பதிவுக் கோட்பாடுகளின் அடிப்படையில் மதிப்பீடு செய்யப்பட்டன. சாதுர்யாஸ்ரீ, ஹரிணி, தன்யா, அகல்யா குழுவினர் சிறப்பான காணொளி தயாரித்து பாராட்டு பெற்றனர்.

பயிற்சி முடிவில் அனைத்து மாணவர்களும் தங்களது கருத்துகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் மாணவி செல்வி சுதந்தரா வரவேற்புரை வழங்கினார். நிறைவில் மாணவி செல்வி அன்னிக் நன்றியுரை ஆற்றினார்.

இந்நிகழ்வின் செயல்பாடுகளை மாணவர்கள் முரளிதரன், திருவிக்ரமன் மற்றும் மாணவி ஜெயம் ஆகியோர் ஆவணப்படுத்தி, பிற மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன் பெறும் வகையில் பரப்புவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *