காரைக்கால்,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உலகப் புகழ்பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலய மாங்கனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான பிச்சாண்ட மூர்த்தி வீதி உலா மற்றும் மாம்பழம் இரைத்தல் நிகழ்ச்சி ஜூன் 29 அன்று நடைபெறவுள்ளது.
இதையொட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து டன் கணக்கில் மாம்பழங்கள் காரைக்காலுக்கு கொண்டு வரப்பட்டு, பல்வேறு பழக்கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பொதுமக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தரமான பழங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் நோக்கில், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பழக்கடைகளிலும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், மாம்பழங்கள் தடை செய்யப்பட்ட ரசாயனப் பொருட்களை பயன்படுத்தி செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டுள்ளனவா என்பது குறித்து சோதனை செய்யப்பட்டது.
ஆய்வின் போது, உணவுப் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி ரசாயனப் பொருட்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைத்திருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட வியாபாரிகள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், பொதுமக்கள் தரமான மற்றும் பாதுகாப்பான மாம்பழங்களை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றும், சந்தேகத்திற்கிடமான பழங்கள் குறித்து உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்குமாறும் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.