​கோவை:
மாணவர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுக்கும் நோக்கில், கோவை ராமநாதபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் டிரினிட்டி பள்ளி சார்பில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
​இப்பள்ளியின் தாளாளர் Rev. Fr. மார்ட்டின் பட்டறமடத்தில், மற்றும் முதல்வர் டாக்டர் J. தனலட்சுமி ஆகியோர் முன்னிலையில், பள்ளி மாணவ, மாணவிகள் உற்சாகமாக பங்கேற்று போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.


​நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, மாணவர்கள் தத்ரூபமாக அரங்கேற்றிய சாலை நாடகம் (Street Play) பொதுமக்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. போதைப்பொருளுக்கு அடிமையாகும் இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கை எவ்வாறு சீரழிகிறது என்பதையும், அதனால் உடல்நலம், மனநலம், கல்வி, குடும்ப உறவுகள் மற்றும் சமூக வாழ்வில் ஏற்படும் பேரழிவுகளையும் மாணவர்கள் உணர்வுபூர்வமாக நடித்துக் காட்டினர்.


​தொடர்ந்து, போதைப்பொருள் பழக்கத்தால் நேரிடும் குற்றச்செயல்கள், விபத்துகள் மற்றும் எதிர்கால இழப்புகள் குறித்து மாணவர்கள் விழிப்புணர்வு வாசகங்களை முழங்கினர். போதைப்பொருளை முற்றிலும் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்ற வேண்டும் என்றும்; இளைஞர்கள் தங்களது கவனத்தை விளையாட்டு, கல்வி மற்றும் சமூகப் பணிகளில் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.


​பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஆர்வமுடன் கண்டு ரசித்ததுடன், மாணவர்களின் அசாத்திய நடிப்புத் திறனையும், சமூக அக்கறையையும் வெகுவாகப் பாராட்டினர். மாணவர்களின் திறமையையும், சமூக பொறுப்புணர்வையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்த நிகழ்ச்சி, போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை அப்பகுதியில் மேலும் வலுப்படுத்தியது.
​இவ்விழாவில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டு, போதைப்பொருள் இல்லாத ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்ற உறுதியை வெளிப்படுத்தினர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *