தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, கோவை சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள முத்தூஸ் மருத்துவமனையில் மருத்துவர்கள் தின விழா நடைபெற்றது.
மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரேமா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் மருத்துவமனைக்கு வந்திருந்த நோயாளிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
விழாவின் போது, மருத்துவர்களின் அர்ப்பணிப்பு மிக்க சேவையைப் பாராட்டும் வகையில் செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ரோஜா மலர்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவர்கள் கேக் வெட்டி, ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டு மருத்துவர்கள் தினத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.
இந்த ஆண்டு மருத்துவர்கள் தினத்தின் கருப்பொருளான “Behind the Mask: Who Heals the Healers?” (முகக்கவசத்தின் பின்னால்: மருத்துவர்களைக் குணப்படுத்துபவர்கள் யார்?) என்பதன் முக்கியத்துவமும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
நோயாளிகளின் உயிரைக் காக்கும் பணியில் இரவு பகலின்றி உழைக்கும் மருத்துவர்களின் உடல் மற்றும் மனநலனையும் பாதுகாப்பது சமூகத்தின் பொறுப்பு என்பதையும், மருத்துவர்களின் நலனில் அக்கறை செலுத்துவதன் மூலம் மட்டுமே சிறந்த மருத்துவச் சேவையை உறுதி செய்ய முடியும் என்பதையும் நிர்வாக இயக்குநர் டாக்டர் பிரேமா தெரிவித்தார்.
மருத்துவர்களின் தன்னலமற்ற சேவையைப் போற்றும் வகையில் நடைபெற்ற இந்த விழா, நன்றியுணர்வையும் உற்சாகத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்தது குறிப்பிடதக்கது..