கோவை: கோவை மாவட்டம் சூலூர் தொகுதிக்குட்பட்ட இருகூர் பகுதியில், தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
சூலூர் காந்தி சேவா நிலையத்தில் காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, சூலூர் சட்டமன்ற உறுப்பினர் என்.எம். சுகுமார் தலைமை தாங்கினார்.
விழாவில் 120 கர்ப்பிணி பெண்களுக்கு வளையல்கள் அணிவித்து, அட்சதை தூவி சமுதாய வளைகாப்பு நடத்தி வைக்கப்பட்டது. மேலும், சூலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கு சீர்வரிசை தட்டுகள் மற்றும் ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் நிறைவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஐந்து வகையான உணவுகள் பரிமாறப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக வெற்றிக் கழகத்தின் இருகூர் பகுதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.