திருவாரூர்., ஜூலை. 09

தென்கைலாயம் என போற்றப்படும் திருவாரூர் ஸ்ரீகைலாசநாதர் ஆலய மகா கும்பாபிஷேக விழா விமர்சையாக இன்று நடைபெற்றதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். திருவாரூர் ஆழித்தேரோடும் கிழக்கு ராஜ வீதியில் அமைந்துள்ள ஸ்ரீமாணிக்கவள்ளி சமேத ஸ்ரீகைலாசநாதர் ஆலயம் தொன்மை சிறப்பு வாய்ந்த ஆலயம்.
தென்கைலாயம் என போற்றப்படும் இவ்வாலயத்தில் மூலஸ்தானத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீகைலாசநாதர் முன்னோர்கள் செய்த பாவங்களில் இருந்து நிவர்த்தி அளிப்பவராக அருள்பாலிக்கிறார். இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலயம் புதுப்பிக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தையொட்டி கடந்த 3 நாட்களாக 4 கால யாகசாலை பூஜைகள் ஏராளமான வேத விற்பன்னர்களை கொண்டு விமர்சையாக நடைபெற்று வந்தன. இன்று நான்காம் கால யாகசாலை பூஜை நிறைவாக மகா பூர்ணாஹுதி தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க ஆலய சிவாச்சாரியார்கள் புனிததீர்த்த கடங்களை சுமந்து ஆலயத்தினை வலம்வந்து மூலஸ்தான கோபுர விமான கலசம் மற்றும் ராஜகோபுர விமான கலசங்களை அடைந்தனர்.
பின்னர் கோபுர விமான கலசத்தின் மீது வண்ண வண்ண மலர்களால் சிறப்பு பூஜைகளை நடத்திய சிவாச்சாரியார்கள் தொடர்ந்து கோபுர விமான கலசங்கள் மீது கடங்களில் இருந்து புனித தீர்த்தத்தை ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.
தொடர்ந்து கோபுர விமான கலசத்திற்க்கு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. குடமுழுக்கு விழாவினை கண்டு வழிபட்ட திரளான பக்தர்கள் மீது புனித தீர்த்தம் தெளிக்கப்பட்டது.
பின்னர் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீ சுப்பிரமணியர், மூலவர் ஸ்ரீகைலாசநாதர், அம்பாள் ஸ்ரீமாணிக்கவள்ளி அம்மன் மற்றும் ஸ்ரீஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.