திருவாரூர், ஜூலை 14: திருவாரூர் நகரப் பகுதியில் சட்டமேதை டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கருக்கு அரசு சார்பில் வெண்கலச் சிலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் மனுநீதி முகாமில், ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு இந்தக் கோரிக்கை மனுவை சமர்ப்பித்தனர்.

மனுவில் கூறியிருப்பதாவது:

திருவாரூர் மாவட்டத் தலைநகராக விளங்கும் திருவாரூர் நகரத்தில் டாக்டர் பாபாசாகிப் அம்பேத்கரின் திருவுருவச் சிலை இதுவரை அமைக்கப்படவில்லை. இதனால், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் மரியாதை செலுத்த விரும்பும் பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்பினர் சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டி அல்லது மன்னார்குடி நகரங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

திருவாரூர் நகர எல்லைக்குள் அம்பேத்கருக்கு சிலை அமைக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக அமைப்புகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன. எனினும், பல்வேறு காரணங்களால் இதுவரை அந்தக் கோரிக்கை நிறைவேறவில்லை.

எனவே, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, அரசு சார்பில் அம்பேத்கருக்கு வெண்கலச் சிலை அமைக்க வேண்டும். மேலும், பொதுமக்கள் எளிதில் அணுகக்கூடிய வகையில் திருவாரூர் புதிய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மைய மாவட்ட நூலகம் அல்லது வாளவாய்க்கால் ரவுண்டானா ஆகிய இடங்களில் ஏதேனும் ஒரு முக்கிய இடத்தைத் தேர்வு செய்து சிலையை நிறுவ போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *