திருவாரூர், ஜூலை 14:
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுகாவிற்கு உட்பட்ட கெழுவத்தூர் ஊராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், கெழுவத்தூர்–மண்ணுக்கும் உண்டான் இணைப்புச் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில், பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டம் (PMGSY) கீழ், 2023–2024 நிதியாண்டில் ரூ.7.5 கோடி மதிப்பீட்டில், 7.5 கிலோமீட்டர் நீளமுள்ள கெழுவத்தூர் முதல் மண்ணுக்கும் உண்டான் வரையிலான இணைப்புச் சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டதாகவும், அதற்கான பணிகள் தனியார் ஒப்பந்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், பணிகள் தொடங்கி இரண்டு ஆண்டுகள் ஆகியும் சாலை அமைக்கும் பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதுவரை எந்த முன்னேற்றமும் இல்லாமல் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதனால் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக மாறி, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு தகுதியற்ற ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சாலையைப் பயன்படுத்தி பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவர்கள், வேலைக்குச் செல்வோர் மற்றும் விவசாயிகள் தினந்தோறும் கடும் சிரமத்துக்கு ஆளாகி வருவதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் சாலையில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக மாறுவதாலும், கோடைக்காலங்களில் அதிகளவில் தூசி பறப்பதாலும் பொதுமக்கள் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவசர மருத்துவச் சேவைக்காக ஆம்புலன்ஸ் வாகனங்கள் கூட சரியான நேரத்தில் வந்து சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே, கிடப்பில் உள்ள சாலைப் பணிகளை மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனத்தின் மூலம் விரைவாகவும், தரமான முறையிலும் பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.