திருவொற்றியூர், ஜூலை 15:
எண்ணூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வரும் சிவா (33), அவரது மனைவி மோனிஷா (30) ஆகியோர் மீது முன்விரோதம் காரணமாக மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதுடன், வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டியோ இருசக்கர வாகனத்திற்கும் தீ வைத்துச் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் சிவாவின் வீட்டிற்கு வந்து, வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டியோ இருசக்கர வாகனத்திற்கு தீ வைத்தனர். பின்னர், 122-வது பிளாக்கில் உள்ள மோனிஷாவின் வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பொருட்களை சூறையாடியதுடன், சிவா மற்றும் மோனிஷாவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் காயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த எண்ணூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். எனினும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டிய பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், ஏற்கனவே இந்தச் சம்பவத்தில் உறவினரான பிரியன் (20) என்பவரின் கை உடைக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச் சென்றனர். அப்போது ஒரு தரப்பினர் எர்ணாவூர் மேம்பாலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டு, தாக்குதலில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எண்ணூர் காவல்துறை அதிகாரிகள் மற்றும் திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் கைவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் சுரேஷ், பெரியமலை, கலை, கார்த்திக், சரவணன் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து, காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்விரோதம் காரணமாக ஏற்பட்ட இந்தச் சம்பவம் குறித்து எண்ணூர் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.