காரைக்கால், ஜூலை 14:
காரைக்கால் மாவட்டம் அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் கோயிலில், அமாவாசையும் செவ்வாய்க்கிழமையும் ஒரே நாளில் அமைந்ததையொட்டி இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனை முன்னிட்டு அம்மனுக்கு பால், மஞ்சள், பஞ்சாமிர்தம், திரவியப் பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் காரைக்கால், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருநள்ளாறிலிருந்து மேற்கே சுமார் 11 கிலோமீட்டர் தொலைவிலும், பேரளத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள அம்பகரத்தூர், அருள்மிகு அஷ்டபுஜ பத்ரகாளியம்மன் கோயிலால் புகழ்பெற்ற தலமாக விளங்கி வருகிறது.
இக்கோயிலின் தலவரலாற்றின்படி, அசுரன் அம்பரனை அழிப்பதற்காக அன்னை காளி வடதிசை நோக்கி உக்கிர கோலத்தில் எழுந்தருளிய இடமே இத்தலம் என கூறப்படுகிறது. ‘அம்பரன் ஹரத்தூர்’ (அம்பரனை வென்ற ஊர்) என்ற பெயரே காலப்போக்கில் மருவி ‘அம்பகரத்தூர்’ என அழைக்கப்படுவதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.