தமிழகத்தின் வேகமாக வளர்ந்து வரும் முக்கிய நகரங்களான கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை மத்திய அரசு மீண்டும் நிராகரித்திருப்பதற்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் தலைவர் முகம்மது ரபி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தின் தொழில், கல்வி, மருத்துவம் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகளில் முன்னணி நகரமாக கோவை தொடர்ந்து வளர்ச்சி பெற்று வருவதாக கூறினார். இத்தகைய சூழலில், நகரின் போக்குவரத்து நெரிசலை குறைத்து, பொதுமக்களின் பயணத்தை எளிதாக்க மெட்ரோ ரயில் திட்டம் மிகவும் அவசியமானதாக இருப்பதாக தெரிவித்தார்.

மேலும், கோவை நகரம் தமிழகத்திற்கு மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடகாவை இணைக்கும் முக்கிய வர்த்தக மற்றும் போக்குவரத்து மையமாக விளங்குகிறது என்றும், தினந்தோறும் இலட்சக்கணக்கான மக்கள் வேலை, தொழில், கல்வி, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக கோவைக்கு வந்து செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த நகரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம் வழங்கப்படாதது ஏமாற்றமளிப்பதாக அவர் தெரிவித்தார்.

அதேபோல், மதுரையும் தென் தமிழகத்தின் முக்கிய நகரமாக வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அந்த நகருக்கும் மெட்ரோ ரயில் திட்டம் அவசியமானதாக இருப்பதாக கூறினார்.

கோவை மற்றும் மதுரை போன்ற வளர்ந்து வரும் மாநகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதற்காக தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி, தேவையான அழுத்தத்தை மத்திய அரசுக்கு வழங்க வேண்டும் என்றும் முகம்மது ரபி கோரிக்கை விடுத்தார்.

மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவையை கருத்தில் கொண்டு, கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டத்தை விரைந்து நடைமுறைப்படுத்த மத்திய அரசு மறுபரிசீலனை செய்து சாதகமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *