தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்: தாராபுரம் அருகே சின்னக்கம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் – சிக்கனாபுரம் பகுதியில், கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகம் முறையாக நடைபெறவில்லை எனக் கூறி, அப்பகுதி பொதுமக்கள் இன்று தாராபுரம்–உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

பொதுமக்கள் கூறுகையில், சின்னக்கம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் கடந்த ஆறு மாதங்களாக குடிநீர் விநியோகத்தில் கடுமையான அலட்சியம் காட்டி வருவதாக குற்றம்சாட்டினர். குறிப்பாக, கடந்த பல நாட்களாக ஒரு சொட்டு குடிநீர் கூட வழங்கப்படாததால், அன்றாட வாழ்க்கையே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், முதியவர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர். தாராபுரம்–உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கன்னிமார் திருக்கோவில் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து, “தண்ணீர் வேண்டும்… தண்ணீர் வேண்டும்…” என முழக்கமிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டம் காரணமாக கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் செல்ல வேண்டிய பேருந்துகள், அரசு மற்றும் தனியார் வாகனங்கள் நீண்ட வரிசையில் சிக்கிக் கொண்டதால், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். உடனடியாக குடிநீர் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

ஆனால், அதற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “ஒவ்வொரு முறையும் அதிகாரிகள் வந்து வாக்குறுதி அளித்துவிட்டு செல்கின்றனர். ஆனால், நிரந்தர தீர்வு எதுவும் கிடைப்பதில்லை. ‘குழாய் உடைந்துவிட்டது’, ‘மோட்டார் பழுதாகிவிட்டது’ என்ற ஒரே காரணத்தை கூறிக்கொண்டே காலம் தாழ்த்துகின்றனர். இனி தற்காலிக தீர்வு வேண்டாம்; நிரந்தரமாக குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும்” என்று ஆவேசமாக தெரிவித்தனர்.

மேலும், சின்னக்கம்பாளையம் பேரூராட்சி நிர்வாகம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். குடிநீர், சாலை, சாக்கடை, குப்பை அகற்றுதல், பொதுக் கழிவுநீர் கால்வாய்கள் சுத்தம் செய்தல் போன்ற அடிப்படை வசதிகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

அதுமட்டுமல்லாமல், ஆழ்துளைக் கிணறுகளில் பொருத்தப்பட்டிருந்த மின் மோட்டார்களை அகற்றி முறைகேடாக விற்பனை செய்து விடுவதாகவும் சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

“எங்கள் கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலேயே அமராவதி ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், குடிப்பதற்கும், சமையலுக்கும், குழந்தைகளை குளிப்பாட்டுவதற்கும், அன்றாட தேவைகளுக்குக் கூட ஒரு சொட்டு தண்ணீர் கிடைக்கவில்லை. இதைவிட வேதனை என்ன இருக்க முடியும்?” என்று பெண்கள் கண்ணீருடன் கூறிய சம்பவம் அங்கிருந்தவர்களை உருக்கமடையச் செய்தது.

குடிநீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால், அந்த அடிப்படை தேவையைக்கூட நிறைவேற்ற முடியாத நிலைக்கு பேரூராட்சி நிர்வாகம் தள்ளப்பட்டிருப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். பல மாதங்களாக நீடித்து வரும் இந்தக் குடிநீர் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகமும், பேரூராட்சி அதிகாரிகளும் உடனடியாக நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் ஒருமித்த கோரிக்கையாக உள்ளது.

இந்தச் சம்பவத்தால் சிக்கனாபுரம் தண்ணீர்பந்தல் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியதுடன், அதிகாரிகளின் அலட்சியப் போக்கு மீண்டும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் தாராபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ராமச்சந்திரன் சாலை மறியலில் ஈடுபடும் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் அப்பொழுது பொதுமக்கள் தண்ணீர் வழங்கினால் மட்டுமே சாலை மறியல் போராட்டத்தை கைவிடுவோம் என தெரிவித்தனர் பொதுமக்களுக்கு போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்படும் ஆய்வாளர் வாகனத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு விடப்பட்டது இதனால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது . இதனால்
பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *