காங்கேயம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
காங்கயம் நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி வழங்கப்படுவதாக வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார்.
காங்கயம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடைகளில் தரமற்ற அரிசி விநியோகம் செய்யப்படுவதாக காங்கயம் வட்ட வழங்கல் அலுவலரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கயம் தாலுகாகுழு உறுப்பினர் ரா.செல்வராஜ், காங்கயம் வட்ட வழங்கல் அலுவலரிடம் செவ்வாய்க்கிழமை கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியுள்ளதாவது: காங்கயம் தாலுகாவுக்கு உள்பட்ட காங்கயம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நியாய விலைக் கடைகளும், வெள்ளகோவில் பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், இப்பகுதி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி தரமற்ற முறையிலேயே வழங்கப்படுகிறது. 2 தினங்களுக்கு முன்பு, சிவன்மலை பகுதியைச் சேர்ந்த ஒருவர், அப்பகுதி நியாய விலைக் கடையில் மாதாந்திர ரேஷன் பொருள்கள் வாங்கும்போது, அவருக்கு வழங்கப்பட்ட 15 கிலோ அரிசி பழுப்பு நிறத்தில், தரமற்று இருந்துள்ளது.
மேலும், வெள்ளகோவில் உப்புபாளையம் பகுதியில் உள்ள நியாய விலைக் கடையில் வழங்கப்பட்ட அரிசி தரமற்று பழுப்பு நிறத்தில் உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், குடும்ப அட்டைதாரர்கள் இது தொடர்பாக நியாய விலைக் கடை ஊழியரிடம் கேட்டபோது உரிய பதில் அளிக்கவில்லை.
எனவே, ரேசன் பொருள்களை நம்பியுள்ள, பெரும்பாலான மக்கள் பயன்படுத்தும் அரிசி தரமான அரிசியாக விநியோகம் செய்யப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு கொடுக்கும் நிகழ்ச்சியின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காங்கயம் பகுதி நிர்வாகிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.