தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் திருப்பூர் மாவட்ட 8-வது மாநாடு: 24 தீர்மானங்கள் நிறைவேற்றம்

தாராபுரம்,

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட 8-வது மாநாடு வியாழக்கிழமை தாராபுரத்தில் உள்ள தோழர் டி.பி. முத்துசாமி நினைவரங்கம், ஸ்ரீ சிவரஞ்சனி திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

மாநாட்டில் மாவட்டம் முழுவதிலுமிருந்து திரளான விவசாயிகள், சங்க நிர்வாகிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்றனர். விவசாயம், பாசன வசதி, நில உரிமை, கால்நடை பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, விவசாய விளைபொருட்களுக்கு உரிய விலை, மின் இணைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டு 24 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்களில், பரம்பிக்குளம்–ஆழியாறு திட்டத்தின் கீழ் நலலாறு அணை மற்றும் ஆனைமலையாறு அணைத் திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், அமராவதி பாசனப் பகுதிக்காக அப்பர் அமராவதி அணைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள உபரி நிலம், பஞ்சமி நிலம், பூமிதான நிலங்களை மீட்டு ஏழை, எளிய மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும், புறம்போக்கு நிலங்களில் பல ஆண்டுகளாக குடியிருந்து வருபவர்களுக்கு அரசு ஆணை எண் 480-ன் அடிப்படையில் வகைமாற்றம் செய்து வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணாபுரம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனப்படுத்தி மீண்டும் இயக்க வேண்டும், கால்நடை மருத்துவ சேவைகளை மேம்படுத்த வேண்டும், தெருநாய் மற்றும் வனவிலங்குகளால் ஏற்படும் உயிரிழப்பு, கால்நடை மற்றும் பயிர் சேதங்களுக்கு முழுமையான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாநாடு வலியுறுத்தியது.

விவசாயிகளின் பயிர்க் கடன்களை தேர்தல் வாக்குறுதியின்படி தள்ளுபடி செய்ய வேண்டும், உரித்த தேங்காய் மற்றும் கொப்பரைக்கு அரசே ஆதரவு விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும், தாராபுரத்தில் தினசரி மொத்த காய்கறி சந்தை அமைக்க வேண்டும், முருங்கை மற்றும் கண்வலிக்கிழங்கு ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், அவிநாசி–அத்திக்கடவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும், நொய்யல் ஆற்றை மாசுபடாமல் பாதுகாக்க வேண்டும், இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதை தடுக்க வேண்டும், பசும்பாலுக்கு லிட்டருக்கு ரூ.45 மற்றும் எருமைப்பாலுக்கு ரூ.60 வழங்க வேண்டும், திருப்பூரில் ஆவின் டெய்ரி அமைக்க வேண்டும், கறிக்கோழி வளர்ப்பு விவசாயிகளுக்கு வளர்ப்புக் கூலியை உயர்த்த வேண்டும், இனாம் ஒழிப்பு சட்டப்படி பட்டா பெற்ற நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும், எம்.எஸ். சுவாமிநாதன் பரிந்துரைப்படி விவசாய விளைபொருட்களுக்கு உத்தரவாத விலை வழங்க சட்டம் இயற்ற வேண்டும், உரம் மற்றும் விதை விலையேற்றத்தை கட்டுப்படுத்த வேண்டும், தட்கல் மற்றும் இலவச திட்டங்களில் பதிவு செய்த அனைத்து விவசாயிகளுக்கும் உடனடியாக மின் இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

இந்தத் தீர்மானங்களை தமிழக அரசும், ஒன்றிய அரசும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநாடு வலியுறுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *