செப்டம்பர் 21
நாமக்கல் மாவட்டம்.
சுகாதாரத்துறை அமைச்சர் அருண் ராஜ் அமைச்சரின் தொகுதி மற்றும் சொந்த ஊரில் குடிநீர் தட்டுப்பாடு – காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்த பொதுமக்கள்
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு வட்டம் திருமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட கோட்டப்பாளையம், சின்னகோட்டப்பாளையம், உத்தண்டிபாளையம், பெரியகோட்டப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த மூன்று மாதத்திற்கு முன்பு தங்கு தடை இன்று வந்த குடிநீர் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது
இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றில் நீர்மட்டம் குறைந்ததால், கடந்த ஆறு மாதங்களாக முறையாக குடிநீர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
மேலும், வாரத்திற்கு ஒருமுறை வழங்கப்பட்டு வந்த ஆற்று குடிநீரும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் குடிநீர் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான தண்ணீரின்றி கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும் தெரிவித்தனர்.
பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட குடும்பத்தினர் தண்ணீருக்காக மிகவும் சிரமப்படுவதாகவும், சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் விவசாய நிலங்களில் இருக்கும் கிணறுகளில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.
இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும், நடவடிக்கை எடுப்பதாக கூறிய நிலையில் இதுவரை நிரந்தர தீர்வு ஏற்படுத்தப்படவில்லை எனவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.
குடிநீர் பிரச்சினையை தீர்க்க வலியுறுத்தி, அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் காலி குடங்களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
மேலும், தங்கள் பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், சுகாதாரத்துறை அமைச்சருமான அருண் ராஜ், தங்களது குடிநீர் பிரச்சினையை நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அமைச்சரின் சொந்த ஊர் பகுதியிலேயே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறி, பொதுமக்கள் காலி குடங்களுடன் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.