தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம்:
தாராபுரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் திருமதி பானுமதி, மூலனூர் ஒன்றியம் கன்னிவாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவருடன் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என். நடராஜன் உள்ளிட்ட அ.தி.மு.க., பாரதிய ஜனதா கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பிரச்சாரத்தின்போது வேட்பாளர் பானுமதி பொதுமக்களிடம் பேசியதாவது:
“மாண்புமிகு எடப்பாடியார் அவர்களுக்கு நீதி வேண்டும் என்பதற்காக மக்களை நாடி வருகிறோம். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். அ.தி.மு.க. சார்பில் கடந்த தேர்தலில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு, அவர் வெற்றி பெற்ற பின்னர் வேறு கட்சியில் இணைந்து கொண்டு, மீண்டும் இதே தொகுதியில் அந்தக் கட்சியின் சார்பில் போட்டியிடுவது மிகப்பெரிய துரோகம். இதன் மூலம் அ.தி.மு.க. தொண்டர்களையும், தாராபுரம் தொகுதி மக்களையும் அவர் ஏமாற்றியுள்ளார்.
ஆளுங்கட்சியான தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற உறுப்பினர்களை தங்கள் பக்கம் இழுத்ததன் காரணமாகவே தாராபுரம் தொகுதிக்கு இடைத்தேர்தல் ஏற்பட்டுள்ளது. கடந்த மூன்று, நான்கு மாதங்களாக தாராபுரம் தொகுதிக்கு மக்கள் பிரதிநிதி இல்லாததால், பொதுமக்கள் தங்களது குறைகளை எடுத்துச் சொல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலைக்கு காரணமான சத்தியபாமா செய்ததாக நாங்கள் கருதும் அநீதிக்கு எதிராக, மக்களிடம் நீதி கேட்கிறோம். எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இரட்டை இலை வெற்றி பெற்றால் மட்டுமே தர்மம் வெல்லும்; அதர்மம் வீழும். எங்களை அச்சுறுத்தும் வகையில் ஆளுங்கட்சி பொய் வழக்குகளைப் போடுகிறது. மக்களை நாங்கள் நம்புகிறோம். மக்களிடம் நீதி கேட்கிறோம். என்னை வெற்றி பெறச் செய்தால், எடப்பாடியார் அவர்கள் உரிய நீதி வழங்குவார்கள் என்பது உறுதி” என்றார்.
பிரச்சாரத்தின்போது வேட்பாளர் பானுமதி சென்ற இடங்களிலெல்லாம் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்ததுடன், அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.
தாராபுரம் (தனி) தொகுதிக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது.