நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் நரிமணம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் எதிரில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தலையில் துண்டு போட்டு கொண்டு நெற்றியில் நாமம் அணிந்து நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் காளிதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் முழுவதையும் நிபந்தனையின்றி ரத்து செய்ய வேண்டும். நெல்லுக்கான ஆதார விலையை குவிண்டாலுக்கு 3,500 ஆக உயர்த்த வேண்டும். கரும்புக்கான ஆதார விலையை டன்னுக்கு 4,500 ஆக நிர்ணயிக்க வேண்டும். தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்.
இயற்கை சீற்றங்கள் மற்றும் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வறட்சி நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.