C K RAJAN
Cuddalore District Reporter
9488471235
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், 12வது தேசிய கைத்தறி தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் (07.08.2026) அன்று கைத்தறி கண்காட்சியை துவக்கி வைத்தார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,
1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 ஆம் நாள் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தின் நினைவாகவும், இந்திய கைத்தறி நெசவாளர்களின் அர்ப்பணிப்பு, உழைப்பு மற்றும் நாட்டின் பாரம்பரிய கைத்தறி தொழிலின் பெருமையை போற்றும் வகையிலும் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 2015 ஆம் ஆண்டு முதல் இந்திய அரசு தேசிய கைத்தறி தினத்தை அதிகாரப்பூர்வமாக கடைப்பிடித்து வருகிறது. கைத்தறி தொழிலின் வளர்ச்சி, நெசவாளர்களின் வாழ்வாதார முன்னேற்றம் மற்றும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.
கண்காட்சியில் கைத்தறி நெசவாளர்கள் தயாரித்த பட்டு மற்றும் பருத்தி ஆடைகள், பாரம்பரிய கைத்தறி துணிகள், வீட்டு உபயோக ஜவுளிப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உற்பத்திப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை பார்வையிட்டு, தயாரிப்புகளின் தரம், வடிவமைப்பு மற்றும் சந்தைப்படுத்தல் வாய்ப்புகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தமிழக அரசின் சமார்த் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவாளர்களின் திறன் மேம்பாடு மற்றும் வாழ்வாதார முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வகையில், ரூ.2.06 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 5 நெசவாளர்களுக்கு வழங்கினார். மேலும், நெசவு பயிற்சி பெற்ற நெசவாளர்களுக்கு பயிற்சி நிறைவு செய்ததற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. அரசு வழங்கி வரும் பல்வேறு நலத்திட்டங்களை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு கைத்தறி தொழிலை மேம்படுத்த வேண்டும் என்றும், புதிய வடிவமைப்புகள், தரமான உற்பத்தி மற்றும் நவீன சந்தைப்படுத்தல் முறைகளை பின்பற்றுவதன் மூலம் வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
கைத்தறி தொழில் என்பது தமிழரின் பாரம்பரிய அடையாளமாக மட்டுமல்லாமல், ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமாகவும் விளங்கி வருவதாக தெரிவித்தார். கைத்தறி பொருட்களை பொதுமக்கள் அதிகம் பயன்படுத்துவதன் மூலம் நெசவாளர்களின் பொருளாதார நிலை உயர்வதுடன், சுற்றுச்சூழலுக்கு உகந்த இயற்கை நார் ஆடைகளின் பயன்பாடும் அதிகரிக்கும் என்றார். இளைஞர்களும் கைத்தறி தொழிலில் ஆர்வம் காட்டி, புதிய தொழில்நுட்பங்களுடன் இணைந்து தொழிலை முன்னேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கைத்தறி உதவி இயக்குனர் இளங்கோவன்,கோ ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் மாணிக்கம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.