இரா.பாலசுந்தரம்-செய்தியாளர்,திருவாரூர்.
திருவாரூர் விஜயபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு பழனி மலை இடும்பன் ஆலயத்தில், ஆடி மாத நான்காவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திருவிளக்கு பூஜை பக்தி சிறப்புடன் நடைபெற்றது.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகள் அம்மன் வழிபாட்டிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், ஆலயத்தில் நடைபெற்ற இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.இதனை முன்னிட்டு, ஆலயத்தில் உள்ள அருள்மிகு முத்து மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தொடர்ந்து அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.இதனைத் தொடர்ந்து ஆலய வளாகத்தில் ஆடி மாத நான்காவது வெள்ளி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் பெண்கள் திரளாக கலந்து கொண்டு, திருவிளக்குகளை ஏற்றி அம்மனை வழிபட்டனர்.பெண்கள் குடும்ப நலன், ஆரோக்கியம், வளமான வாழ்வு உள்ளிட்ட பல்வேறு வேண்டுதல்களுடன் திருவிளக்குகளை ஏற்றி வழிபாடு மேற்கொண்டனர்.
தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்று, மகா தீபாராதனை நடைபெற்றது.