மன்னார்குடி., செப். 22-
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் சாலையோர கடைகளுக்கு தடை விதிக்கக் கோரி வர்த்தக சங்கம் சார்பில் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மன்னார்குடி நகரில் பொதுமக்கள் அதிகம் கூடும் முக்கிய பகுதிகள் மற்றும் பள்ளி வளாகங்களுக்கு அருகில் மினி லோடு வேன்கள், தள்ளுவண்டிகள் உள்ளிட்டவற்றின் மூலம் உணவகங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதனால் பொதுமக்களுக்கு போக்குவரத்து மற்றும் நடைபாதை இடையூறுகள் ஏற்படுவதுடன், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சினைகளும் ஏற்படுவதாக அவர்கள் கூறினர்.
மேலும், சுகாதாரமற்ற முறையிலும், உரிய பாதுகாப்பு வசதிகள் இன்றியும் செயல்படும் உணவகங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் விற்பனை நிலையங்கள் மீது நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வர்த்தகர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுதொடர்பாக நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என வர்த்தக சங்கத்தினர் குற்றம்சாட்டினர். இதையடுத்து, தங்களது கோரிக்கையை வலியுறுத்தி இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் காரணமாக மன்னார்குடி நகரில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளதாக வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் நகரின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.