லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சார்பில் சங்க சாசன சான்றிதழ் வழங்கும் விழாவில் லயன்ஸ் சங்க வரலாறு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது.


லயன்ஸ் கிளப் ஆப் திருச்சிராப்பள்ளி விஷன் சாசனத் தலைவர் பேராசிரியர் லயன் பேராசிரியர் எஸ். ஹேமலதா தலைமை வகித்தார். சங்க சாசனச் செயலாளர் லயன் யோகா ஆசிரியர். பெ.விஜயகுமார், சாசனப் பொருளாளர் லயன் எம். முகமது ஹயாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.லயன்ஸ் மாவட்டம் 3242F – மண்டலம்-1 தலைவர் முகமது ஷபி, வட்டாரம் – 1A தலைவர் லயன் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

சிறப்பு விருந்தினர் திருச்சிராப்பள்ளி ஹோஸ்ட் லயன்ஸ் சங்கத்தைச் சேர்ந்த பொறியாளர் லயன் பிரபுகுமார் இன்டர்நேஷனல் லயன்ஸ் சங்கம் குறித்து பேசுகையில்,
லயன்ஸ் கிளப் அல்லது பன்னாட்டு லயன்ஸ் சங்கம் என்பது உலகம் முழுவதும் சமூக சேவையை முன்னெடுத்து வரும் தன்னார்வத் தொண்டு அமைப்பாகும். 1917 ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் மெல்வின் ஜோன்ஸ் முயற்சியால் லயன்ஸ் இயக்கம் உருவானது. சமூகத்தின் தேவைகளை அறிந்து, மனிதநேய அடிப்படையில் சேவை செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.
“நாங்கள் சேவை செய்கிறோம்” என்பதே லயன்ஸ் இயக்கத்தின் அடிப்படை தாரக மந்திரமாகும்.

1925 ஆம் ஆண்டு ஹெலன் கெல்லர் லயன்ஸ் உறுப்பினர்களிடம் பார்வையற்றோருக்கான சேவையில் ஈடுபடுமாறு வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, பார்வைப் பாதுகாப்பு லயன்ஸ் இயக்கத்தின் முக்கிய சேவைத் துறைகளில் ஒன்றாக வளர்ந்தது.


இன்றைய நிலையில் பார்வைப் பாதுகாப்பு மட்டுமின்றி பசியைப் போக்குதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பேரிடர் நிவாரணம், குழந்தைகள் மற்றும் இளைஞர் நலன், மனிதநேய உதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் லயன்ஸ் உறுப்பினர்கள் சேவை செய்து வருகின்றனர்.


சங்க அமைப்பை ஒவ்வொரு லயன்ஸ் சங்க உறுப்பினரும் அறிந்திருக்க வேண்டும்.
ஒரு லயன் தனது கிளப்பின் செயல்பாடுகளை மட்டும் அறிந்திருப்பது போதாது. பன்னாட்டு லயன்ஸ் அமைப்பு முதல் தனிப்பட்ட கிளப் உறுப்பினர் வரை சங்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.


பன்னாட்டு லயன்ஸ் சங்கம்,பல மாவட்டம்,
மாவட்டம்,மண்டலம்,
வட்டாரம்,லயன்ஸ் கிளப்,கிளப் உறுப்பினர்கள் என
ஒவ்வொரு நிலையிலும் தனித்தனி பொறுப்புகள், நிர்வாகிகள் மற்றும் விதிமுறைகள் உள்ளன. பன்னாட்டு அரசியலமைப்பு மற்றும் விதிமுறைகள், பல மாவட்டம் மற்றும் மாவட்ட விதிமுறைகள், கிளப் அரசியலமைப்பு மற்றும் விதிமுறைகள் போன்ற முக்கிய ஆவணங்களையும் உறுப்பினர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.


ஒரு லயன் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
லயன்ஸ் சங்க வரலாறு, மெல்வின் ஜோன்ஸின் வாழ்க்கை மற்றும் சேவைச் சிந்தனை, “நாங்கள் சேவை செய்கிறோம்” என்ற தாரக மந்திரத்தின் பொருள், லயன்ஸ் சின்னத்தின் பயன்பாடு, சங்கத்தின் நோக்கம் மற்றும் குறிக்கோள், கிளப் விதிமுறைகள், மாவட்ட மற்றும் பன்னாட்டு அமைப்பு, நிர்வாகிகளின் பொறுப்புகள், உறுப்பினர்களின் உரிமைகள் மற்றும் கடமைகள், கூட்ட நடைமுறை, தேர்தல் நடைமுறை, சேவைத் திட்டம் தயாரித்தல் மற்றும் அறிக்கையிடுதல், லயன் இணையதளத் தளம் பயன்பாடு, லயன்ஸ் பன்னாட்டு அறக்கட்டளை, மெல்வின் ஜோன்ஸ் அங்கீகாரம், முன்னேற்ற (புரகிரசிவ் )மெல்வின் ஜோன்ஸ் அங்கீகாரம், தலைமைத்துவம் மற்றும் உறுப்பினர் வளர்ச்சி ஆகியவற்றை ஒவ்வொரு உறுப்பினரும் தெரிந்துகொள்ள வேண்டும்.ஒரு உறுப்பினர் கூட்டங்களில் பங்கேற்பது, கருத்து தெரிவிப்பது,

தகுதி இருந்தால் வாக்களிப்பது, சங்கப் பொறுப்புகளுக்கு போட்டியிடுவது, சேவைத் திட்டங்களில் பங்கேற்பது, பயிற்சிகளில் கலந்து கொள்வது மற்றும் தலைமைத்துவ வாய்ப்புகளைப் பெறுவது போன்ற உரிமைகள் உள்ளன.


அதே நேரத்தில் கூட்டங்கள் மற்றும் சேவை நிகழ்ச்சிகளில் பங்கேற்பது, ஒப்படைக்கப்பட்ட பணியை முழுமையாகச் செய்வது, சங்க விதிமுறைகளை மதிப்பது, உறுப்பினர்களிடையே நல்லுறவை வளர்ப்பது, புதிய உறுப்பினர் வளர்ச்சிக்கு உதவுவது, தலைமைப் பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது, சங்க நிதியை பொறுப்புடன் கையாள்வது, நேர்மையுடன் செயல்படுவது மற்றும் அனைவரையும் மரியாதையுடன் நடத்துவது ஆகியவை உறுப்பினரின் முக்கியக் கடமைகளாகும். ஒவ்வொருவரும்


கூட்ட நடைமுறையையும் கற்றுக்கொள்ள வேண்டும்
ஒரு உறுப்பினர் எதிர்காலத்தில் நிர்வாகியாக வரக்கூடும் என்பதால் கூட்ட நிகழ்ச்சி நிரல் தயாரித்தல், கூட்டத்தைத் தொடங்குதல், கூட்டக் குறிப்புகளைப் பதிவு செய்தல், முன்மொழிவு, ஆதரவு, விவாதம், வாக்கெடுப்பு, தீர்மானம், பொறுப்பு ஒதுக்குதல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளைத் திட்டமிடுதல் போன்ற நடைமுறைகளை அறிந்திருக்க வேண்டும்.
கூட்டம் என்பது வெறும் பேச்சுக்கான இடமல்ல; சமூக சேவைக்கான முடிவுகளை எடுக்கும் இடமாகும்.தலைவர், செயலாளர்,பொருளாளர் பொறுப்புகளில்,


சங்க தலைவர் சங்கத்தை வழிநடத்துவதுடன், கூட்டங்களை முறையாக நடத்தி, அனைத்து உறுப்பினர்களுக்கும் வாய்ப்பளித்து, சேவைத் திட்டங்களை முன்னெடுத்து, செயலாளர், பொருளாளர் மற்றும் குழுத் தலைவர்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
செயலாளர் கூட்ட அறிவிப்பு, நிகழ்ச்சி நிரல், கூட்டக் குறிப்புகள், உறுப்பினர் விவரங்கள், அதிகாரப்பூர்வ தொடர்புகள், சேவை நடவடிக்கைகள், அறிக்கைகள் மற்றும் நிர்வாக ஆவணங்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்.


பொருளாளர் வரவு–செலவு, ரசீதுகள், செலவு ஆவணங்கள், வங்கி நடவடிக்கைகள் மற்றும் நிதி அறிக்கைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். சங்கத்தின் நிதி என்பது தனிப்பட்ட பணம் அல்ல; அது சமூக சேவைக்காக வழங்கப்படும் பொது நம்பிக்கை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.லயன்ஸ் இயக்கத்தின் முக்கிய அங்கம்


லயன்ஸ் பன்னாட்டு அறக்கட்டளை உலகளாவிய மனிதநேய சேவைகளுக்கு ஆதரவு வழங்குகிறது. பார்வைப் பாதுகாப்பு, பேரிடர் நிவாரணம், குழந்தைப் புற்றுநோய், இளைஞர் மேம்பாடு மற்றும் பல்வேறு மனிதநேய உதவிகளில் அதன் பங்களிப்பு முக்கியமானதாகும்.


மெல்வின் ஜோன்ஸ் அங்கீகாரம் மற்றும் (புரகிரசிவ்)முன்னேற்ற மெல்வின் ஜோன்ஸ் அங்கீகாரம் சேவை திட்டங்களுக்கு கொடையாக வழங்குபவர்களுக்கு வழங்கப்படும்.
மெல்வின் ஜோன்ஸ் அங்கீகாரம் என்பது லயன்ஸ் பன்னாட்டு அறக்கட்டளைக்கு வழங்கப்படும் மொத்தம் 1,000 அமெரிக்க டாலர் பங்களிப்பை அடிப்படையாகக் கொண்ட அங்கீகாரமாகும்.
அதற்கு அப்பால் தொடர்ந்து வழங்கப்படும் பங்களிப்புகளுக்கான அங்கீகார முறையாக (புரகிரசிவ்)முன்னேற்ற மெல்வின் ஜோன்ஸ் அங்கீகாரம் உள்ளது.


எனவே, “மெல்வின் ஜோன்ஸ் அங்கீகாரம் என்பது ஒரு பதவி அல்ல; மனிதநேயச் சேவைக்கு வழங்கப்படும் பங்களிப்புக்கான அங்கீகாரம்” என்பதை உறுப்பினர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.


வலிமையான லயன்ஸ் கிளப்பிற்கு புதிய உறுப்பினர்களை இணைத்தல், தற்போதைய உறுப்பினர்களின் தொடர்ச்சியான ஈடுபாடு, தரமான சேவை மற்றும் நல்ல தலைமைத்துவம் ஆகியவை அவசியம்.


உறுப்பினர் வளர்ச்சி, தலைமைத்துவ வளர்ச்சி, சேவை மற்றும் புதிய கிளப் உருவாக்கம் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் உலகளாவிய செயல் அணியின் பணிகளையும் உறுப்பினர்கள் அறிந்துகொள்ள வேண்டும்.


சங்கத்தின் பெயரில் தகவல்களை வெளியிடும்போது உண்மையான தகவல்களை மட்டுமே பகிர வேண்டும். அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் பதவிகளைச் சரியாகப் பயன்படுத்த வேண்டும். சங்கச் சின்னத்தை விதிமுறைகளுக்கு ஏற்ப பயன்படுத்த வேண்டும். பயனாளிகளின் தனியுரிமையை மதிக்க வேண்டும். புகைப்படங்களை வெளியிடும்போது தேவையான அனுமதிகளைப் பெற வேண்டும். தனிப்பட்ட கருத்தை சங்கத்தின் அதிகாரப்பூர்வ கருத்தாக வெளிப்படுத்தாமல் இருப்பதும் அவசியம்.


சேவையே லயன்ஸின் அடையாளம்.
லயன்ஸ் சங்கத்தில் இணைவது ஒரு உறுப்பினர் பதவியைப் பெறுவது மட்டுமல்ல; சமூகத்தைப் புரிந்துகொண்டு சேவை செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவதாகும்.
பதவியைப் பெறுவது மட்டுமல்ல, பொறுப்பை ஏற்றுக்கொள்வதும் முக்கியம். அங்கீகாரங்களைப் பெறுவது மட்டுமல்லாமல், மனிதநேயச் சேவைக்கு தொடர்ந்து பங்களிப்பதும் அவசியம்.
“ஒரு நல்ல லயன் சேவை செய்கிறார்; ஒரு சிறந்த லயன் மற்றவர்களையும் சேவையில் ஈடுபடுத்துகிறார்” என்றார்.


நிகழ்வில் லயன் கணேசன், லயன் சுதாகர், லயன் மகேஸ்வரி, லயன் கந்தசாமி, லயன் விக்னேஷ், லயன் திரவிய கிளாடினா, லயன் ராகவேந்திரன், லயன் ஆனந்த கிருஷ்ணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *