கோவை
மக்களுக்கு சேவை செய்யும் நல்ல எண்ணத்துடன்தான் விஜய் அரசியலுக்கு வந்துள்ளார் –கோவையில் சிவாஜி கணேசன் பேரனும் நடிகருமான தர்ஷன் கணேசன் பேட்டி….
டி.டி. பாலச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் கதாநாயகனாக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் நடிகர் கங்கை அமரன், நடிகை ரோஜா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.இளையராஜா இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 25-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், படக்குழுவைச் சேர்ந்த தர்ஷன் கணேசன் மற்றும் நடிகரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய தர்ஷன் கணேசன், நாடகப் பயிற்சிக்குப் பிறகு திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்தார். சென்னையில் பிறந்து வளர்ந்த தனக்கு, கிராமத்தை மையமாகக் கொண்ட கதையில் நடிப்பது சவாலாக இருந்ததுடன், தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவதற்கான சிறந்த வாய்ப்பாகவும் அமைந்ததாகக் கூறினார்.
மேலும், மூத்த கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது சிறந்த அனுபவமாக இருந்ததாகக் குறிப்பிட்ட அவர், மக்களின் அன்றாட வாழ்வியலைப் பிரதிபலிக்கும் வகையில் கதை அமைந்துள்ளதால், திரைப்படம் பார்வையாளர்களுடன் எளிதில் ஒன்றிப்போகும் என நம்பிக்கை தெரிவித்தார்.
திரையுலகினர் அரசியலுக்கு வருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த தர்ஷன் கணேசன், நடிகர் விஜய் மக்களுக்கு சேவை செய்யும் நல்ல எண்ணத்துடன்தான் அரசியலில் களமிறங்கியுள்ளதாகவும், அவரை உற்சாகப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நடிகர் கங்கை அமரன், ‘லெனின் பாண்டியன்’ திரைப்படம் திரையரங்கில் ஒரு திரைப்படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வை மட்டுமல்லாமல், ஒரு கிராமத்து மக்களின் உண்மையான வாழ்க்கையை நேரில் பார்த்துவிட்டு வருவது போன்ற உணர்வையும் ஏற்படுத்தும் என்றார்.
நாட்டின் பிரச்சினைகள், மக்கள் எதிர்கொள்ளும் நிலை, அதிகாரிகளின் செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அழகாகப் பேசும் வகையில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், தனது அண்ணன் இளையராஜா இசையமைத்துள்ள பாடல்கள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்ட கங்கை அமரன், “எங்கள் அண்ணன் இளையராஜாவின் இசை பெரிதாக வர வேண்டும் என நினைத்தேன்; அதேபோல் வந்துவிட்டார்” என மகிழ்ச்சி தெரிவித்தார்.
தனது அரசியல் வருகை குறித்து நகைச்சுவையாகப் பேசிய கங்கை அமரன், திரையுலகில் வெற்றி பெறுபவர்கள் அனைவரும் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவசியமில்லை என்றும், நல்ல நடிகர்களாக இருப்பதே தங்களது எண்ணம் என்றும் தெரிவித்தார்.
மேலும், கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறிய அவர், இப்படத்திற்கு வாய்ப்பு வழங்கிய தயாரிப்பாளர் சக்திதேவி மற்றும் இயக்குநர் பாலச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.