:திருவாரூர் அருகே அலிவலம் சாலை பெரிய மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மதியம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஐந்து வீடுகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின.பெரிய மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று மதியம் சரியாக 12 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கூரை வீடுகளில் பிடித்த தீ, காற்றின் வேகம் காரணமாக அடுத்தடுத்து அக்கம் பக்கத்து வீடுகளுக்கும் அதிவேகமாகப் பரவியது.
இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தீயைக் கட்டுப்படுத்த முயன்றதுடன், உடனடியாகத் தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.இருப்பினும், தீ விபத்தில் வீடுகளில் இருந்த அத்தியாவசியப் பொருள்கள், ஆவணங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் முற்றிலும் எரிந்து தீக்கிரையாகின.இதுகுறித்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வேதனையுடன் கூறும்போது, “தீ விபத்து ஏற்பட்ட உடனேயே தீயணைப்புத் துறைக்குத் தகவல் தெரிவித்துவிட்டோம்.
ஆனால், தகவல் தெரிவித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாகத் தாமதமாகவே தீயணைப்புத் துறை வாகனம் சம்பவ இடத்திற்கு வந்தது. அவர்கள் உரிய நேரத்திற்கு வந்திருந்தால் இவ்வளவு பெரிய இழப்பைத் தடுத்திருக்கலாம்” என்று குற்றம் சாட்டினர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது,