கம்பம்: தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளிலும் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் மற்றும் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் ஆகியோர் தலைமையில், பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் குறைகள் குறித்து நேரடி கள ஆய்வு நடைபெற்றது.
ஆய்வின்போது நகர்மன்ற தலைவர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் ஒவ்வொரு பகுதியாகவும், தெருத்தெருவாகவும் சென்று வீடு வீடாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். குறிப்பாக, வீடுகளில் தினசரி சேகரமாகும் குப்பைகளை பெறுவதற்கு துப்புரவு பணியாளர்கள் முறையாக வருகிறார்களா, தெருக்களில் உள்ள தெருவிளக்குகள் சரியாக எரிகின்றனவா, நகராட்சி குடிநீர் குழாய் இணைப்புகள் மூலம் குடிநீர் முறையாக விநியோகம் செய்யப்படுகிறதா உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தனர்.
மேலும், பொதுமக்கள் தெரிவித்த குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களும் நேரடியாகப் பெறப்பட்டன. அவற்றை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் விரைந்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இந்த ஆய்வில் நகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ், சுகாதார அலுவலர் மணிகண்டன், நகர்மன்ற கவுன்சிலர்கள் கம்பம் சாதிக், சர்புதீன், நகராட்சி ஊழியர்கள் மற்றும் சுல்தான், நவாப் ராஜா, முகமது யூனுஸ், சாகுல் அமீது உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுமக்களும் திரளாக பங்கேற்று தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவித்தனர்.