திருவாரூர், ஆக.19:

திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ஆத்திரமடைந்த நபர் ஒருவர், அலுவலகத்திற்குள் டீசல் கேனுடன் சென்று ஆவணங்கள் மற்றும் ஊழியர்கள் மீது டீசல் ஊற்றி தீ வைக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலர் கீழே விழுந்து காயமடைந்த நிலையில், சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளன.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே தளவாய்யிருப்பு வேலங்குடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரது மகன் ராம்கி (32). இவர், தான் வசித்து வரும் நத்தம் புறம்போக்கு இடத்திற்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் எனக் கோரி கடந்த 3 ஆண்டுகளாக வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், சம்பந்தப்பட்ட இடத்திற்கு வேறு ஒருவரின் பெயரில் பட்டா வழங்கப்பட்டுள்ளதாக ராம்கிக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அவர், நேற்று திருவாரூர் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளார்.

அப்போது அலுவலகத்திற்குள் மறைத்து வைத்திருந்த டீசல் கேனை எடுத்த ராம்கி, அங்கிருந்த ஆவணங்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மீது டீசலை ஊற்றி தீ வைக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

அந்த நேரத்தில் வேறு ஒரு பணிக்காக கோட்டாட்சியர் அலுவலகத்தில் நின்று கொண்டிருந்த நன்னிலம் அருகே உள்ள தூத்துக்குடி கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் விஜய் (45), ராம்கியை தடுத்து நிறுத்த முயன்றார். அப்போது இருவருக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் விஜய் நிலைதடுமாறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது.

காயமடைந்த விஜய் உடனடியாக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே சம்பவம் குறித்து கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் திருவாரூர் நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அலுவலகத்தில் தகராறில் ஈடுபட்ட ராம்கியை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. அலுவலக ஆவணங்கள் மற்றும் ஊழியர்கள் மீது டீசல் ஊற்றி தீ வைக்க முயன்றதாக கூறப்படும் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களிலும் பரவி வருகின்றன.

பட்டா வழங்குவது தொடர்பான நீண்டகால பிரச்சினை காரணமாக அலுவலகத்திற்குள் நுழைந்த நபர், திடீரென தீ வைக்க முயன்றதாக கூறப்படும் சம்பவம் வருவாய்த்துறை அலுவலக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், பட்டா கோரி அளிக்கப்பட்ட மனுக்கள், சம்பந்தப்பட்ட நிலத்தின் ஆவணங்கள், பட்டா வழங்கப்பட்ட விவரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *