மன்னார்குடி., ஆக21.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி நகரின் முக்கிய பகுதிகளில் ஒன்றான நடேசன் தெருவில், பொதுத்துறை வங்கி முன்பாக இருசக்கர வாகனங்கள் சாலையை மறிக்கும் வகையில் குறுக்கே நிறுத்தப்படுவதால், அப்பகுதியில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மன்னார்குடி நகரின் முக்கிய போக்குவரத்து பகுதியாக விளங்கும் நடேசன் தெருவில் தினமும் ஏராளமான பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வந்து செல்கின்றனர். குறிப்பாக பேருந்து நிலையத்துக்கு செல்லும் பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான வாகனங்கள் இந்த சாலை வழியாக தொடர்ந்து சென்று வருகின்றன.

இந்நிலையில், பொதுத்துறை வங்கி முன்பாக வாடிக்கையாளர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை சாலையின் குறுக்கேயும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் நிறுத்தி செல்வதாக கூறப்படுகிறது. இதனால் சாலையின் அகலம் குறைந்து, ஒரே நேரத்தில் எதிரெதிர் திசைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

மேலும், பேருந்து நிலையத்துக்கு அதிகளவில் பேருந்துகள் வந்து செல்லும் நேரங்களில், நடேசன் தெருவில் ஏற்கனவே வாகனப் போக்குவரத்து அதிகமாக காணப்படுகிறது. அதனுடன் சாலையை ஆக்கிரமிக்கும் வகையில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்படுவதால், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் செல்லும்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லும் நேரங்களில் வாகனங்கள் சாலையில் தேங்கி நிற்கும் நிலை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவசரமாக செல்ல வேண்டிய வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்களும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

சாலையின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு, வங்கி முன்பு இருசக்கர வாகனங்களை முறைப்படி நிறுத்துவதற்கான இடவசதி ஏற்படுத்த வேண்டும் என்றும், சாலையின் குறுக்கே அல்லது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், நடேசன் தெருவில் போக்குவரத்து காவல்துறையினர் அவ்வப்போது கண்காணிப்பு மேற்கொண்டு, போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்தப்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தேவையான இடங்களில் எச்சரிக்கை பலகைகள் அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மன்னார்குடி நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனப் போக்குவரத்தை கருத்தில் கொண்டு, நடேசன் தெரு பகுதியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு சிரமமின்றி பாதுகாப்பாக பயணிக்கவும் போக்குவரத்து காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *