துறையூர் ஆக-21
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள ஒட்டம்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கொமரகவுண்டர் மகன் செல்லமுத்து(85).இவர் கடந்த 23.09.2009 அன்று தனக்கு சொந்தமான விவசாய நிலத்தின் பத்திரத்தை துறையூரில் உள்ள வங்கி ஒன்றில் அடமானம் வைத்து 15 லட்சம் கடன் பெற்றுள்ளார். இந்நிலையில் கடந்த 18.1.2022-ம் தேதி ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ள வங்கியில் இருந்து முதியவர் செல்லமுத்துவுக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தி 04.06. 2022ஆம் தேதி கடன் தொகை செலுத்தப்பட்டு மேற்படி வங்கியின் சார்பாக கடனை ரத்து செய்து ரசீது ஆவணம் துறையூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஆவண எண் 99865/ 2022 என்ற எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து முதியவர் வங்கியில் அடமானம் வைத்த மேற்படி சொத்துக்கு உண்டான அனைத்து அசல் ஆவணங்களும் வங்கி நிர்வாகம் முதியவரிடம் திருப்பி ஒப்படைத்துள்ளது.
இந்நிலையில் முதியவர் மேற்படி நிலத்தை தனது பேரன் பெயரில் தான செட்டில்மெண்டாக எழுதி வைக்கலாம் என்று துறையூர் சார் பதிவாளர் அலுவலகம் சென்று கேட்டபோது மேற்படி சொத்து சம்பந்தப்பட்ட வங்கி கிளையின் கட்டுப்பாட்டில் உள்ளது.அதனால் சொத்தை அவரது பேரனுக்கு தான செட்டில்மெண்ட் எழுத முடியாது என தெரிவித்துள்ளார்கள்.இதை அடுத்து துறையூர் வங்கி கிளையில் முதியவர் இதுகுறித்து கேட்டபோது சரியாக பதில் சொல்லாமல் அலைகழித்ததாக கூறப்படுகிறது. இதனால் சம்பந்தப்பட்ட வங்கி கிளை மேலாளர் நடவடிக்கையால் மன உளைச்சலுக்கு ஆளான முதியவர் வங்கிக் கிளையின் முன்பாக தனது குடும்பத்தினருடன் உண்ணாவிரதம் இருக்க துறையூர் காவல் நிலையத்தில் அனுமதி கேட்டு மனு அளித்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்