கூத்தாநல்லூர்., ஆக.21
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் வட்டம் நாகராஜன் கோட்டகம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாகராஜன் கோட்டகம் கிராமத்தில் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வழிபடுவதற்கான தனி ஆலயம் இல்லாத நிலையில், “கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்” என்ற முன்னோர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, கிராம பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இணைந்து ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் அமைக்க முடிவு செய்தனர்.
இதையடுத்து கடந்த சில மாதங்களாக ஆலய திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று, தற்போது பணிகள் நிறைவடைந்த நிலையில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக நேற்று விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் முதல் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து இன்று காலை யாகசாலை பிரவேசம் மற்றும் கடஸ்தாபனம் செய்யப்பட்டு இரண்டாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. பின்னர் மகாபூர்ணாஹுதி சிறப்பாக நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதியபடி யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித கடங்களை தலையில் சுமந்தவாறு ஆலயத்தைச் சுற்றி வலம் வந்தனர்.
பின்னர் புனித கடங்கள் ஆலய விமான கோபுரத்தை வந்தடைந்ததும், அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீர் விமான கும்பத்தின் மீது ஊற்றப்பட்டு ஸ்ரீ பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பொன்னியம்மன், விநாயகர் மற்றும் முருகப்பெருமான் ஆகிய சன்னதிகளிலும் மூலஸ்தான கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயம் முழுவதும் பக்தர்கள் கூட்டத்தால் களைகட்டியது. நாகராஜன் கோட்டகம் மட்டுமின்றி ராமானுஜம், மணலி, ஓகை, பேரையூர், களிமங்கலம், வடபாதிமங்கலம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, மகா கும்பாபிஷேகத்தை கண்டு தரிசனம் செய்து ஸ்ரீ பொன்னியம்மன் அருளைப் பெற்றனர்.
விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பிரசாத ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. புதிய ஆலயத்தின் மகா கும்பாபிஷேக விழா கிராம மக்களிடையே ஆன்மிக மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.