“ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை நீட் தேர்வு பாதிக்கிறது” – தி.க. துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி குற்றச்சாட்டு
மன்னார்குடி, ஆக.22:
நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், உயர்சாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழக இளைஞரணி, திராவிடர் மாணவர் கழகம் மற்றும் திராவிட மகளிர் பாசறை சார்பில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தழுவிய இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் நடைபெற்றது.
இதன் தொடக்க விழா மற்றும் பரப்புரைக் கூட்டம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பெரியார் சிலை அருகே நடைபெற்றது. நிகழ்ச்சியில் திராவிடர் கழக நிர்வாகிகள், இளைஞரணி, மாணவர் கழகத்தினர், மகளிர் பாசறையினர் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நீட் தேர்வுக்கு எதிராகவும், EWS இடஒதுக்கீட்டை ரத்து செய்ய வலியுறுத்தியும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் தொடங்கி வைக்கப்பட்டது.
பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் மதிவதனி சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
“மக்கள் அமைதியாகவும், நோய் நொடி இல்லாமலும் வாழ வேண்டும் என்றால் மருத்துவத் துறையும், சுகாதாரத் துறையும் சிறப்பாக செயல்பட வேண்டும். ஏழை, எளிய மக்கள் மற்றும் விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் மருத்துவராக வேண்டும் என்பதற்கான வாய்ப்பு சமமாக இருக்க வேண்டும்.
ஆனால், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவை பாதிக்கும் வகையில் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜக அரசு நீட் என்ற தேர்வை நாடு முழுவதும் கொண்டு வந்துள்ளது. இது வெறும் தேர்வு மட்டுமல்ல; சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை மேலும் அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்று குற்றம்சாட்டினார்.
மேலும், “நீட் தேர்வு மாணவர்களின் கல்வித் திறனை மட்டுமே அளவிடுவதாக கூறப்பட்டாலும், அதற்கான தயாரிப்பில் பொருளாதார வசதியும் முக்கிய பங்கு வகிக்கிறது. பல ஏழை, எளிய குடும்பங்கள் தங்களது நிலம் உள்ளிட்ட சொத்துகளை விற்றும், கடன் பெற்றும் பல லட்சம் ரூபாய் செலவு செய்து தங்களது குழந்தைகளை தனியார் பயிற்சி மையங்களில் சேர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பொருளாதார வசதி உள்ள மாணவர்களுக்கு தொடர்ந்து பயிற்சி பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், ஏழை குடும்பங்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைப்பது மிகவும் கடினமாக உள்ளது. இதனால் மருத்துவக் கல்வி என்பது அனைவருக்கும் சமமான வாய்ப்பாக இல்லாமல், பொருளாதார வசதியுடன் தொடர்புடையதாக மாறும் அபாயம் உள்ளது” என்றும் மதிவதனி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “ஒரு முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் மீண்டும் மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்கும் பொருளாதார சுமையும், மன அழுத்தமும் ஏற்படுகிறது. இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த இருசக்கர வாகனப் பரப்புரை பயணம் தொடங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் மத்தியில் தொடர்ந்து கொண்டு செல்வோம். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். மருத்துவக் கல்வி ஏழை, எளிய மக்களின் குழந்தைகளுக்கும் சமமாக கிடைக்க வேண்டும். எதிர்காலத்தில் நீட் என்ற தேர்வே இல்லாத நிலையை உருவாக்குவதற்கான போராட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்று தெரிவித்தார்.
இருசக்கர வாகனப் பரப்புரை பயணத்தில் பங்கேற்றவர்கள், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், EWS இடஒதுக்கீட்டை முழுமையாக ரத்து செய்ய வேண்டும், கல்வியில் சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி சென்றனர்.
மன்னார்குடியில் நடைபெற்ற இந்த பரப்புரை நிகழ்ச்சியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சியில் திராவிடர் கழக நிர்வாகிகள், இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.