தருமபுரி: தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி செந்தில் நகரில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ விநாயகர், நாகர்கள், செந்தில் பாலமுருகன் மற்றும் மகா மாரியம்மன் ஆலயங்களின் புதுப்பிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மகா கும்பாபிஷேகப் பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி கடந்த 10-ஆம் தேதி கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தொடர்ந்து 12 நாட்களாக தினமும் சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றன. விழாவின் ஒரு பகுதியாக பெண்கள் பங்கேற்ற முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றது.
கும்பாபிஷேக நாளான இன்று காலை இரண்டாம் கால பூஜையுடன் கணபதி ஹோமம், காயத்ரி ஹோமம் உள்ளிட்ட சிறப்பு யாகங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து ஊர் பெரியவர்கள் புனித தீர்த்தக் குடங்களை எடுத்துச் சென்று கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர்.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து கோயிலுக்கு வந்திருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.
விழாவில் கௌரவத் தலைவர் குப்புசாமி, தலைவர் செந்தில், செயலாளர் பூபதி, துணைத் தலைவர் கந்தசாமி, ராஜி உள்ளிட்ட கோயில் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.