திருவாரூர்., ஆக.24
மியான்மரில் வேலைக்காக சென்ற திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை மர்ம கும்பல் கடத்தி வைத்து, அவரை விடுவிக்க ரூ.6.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில், திருச்சியில் பணம் பெற வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததையடுத்து, போலீசாரின் எச்சரிக்கைக்கு அஞ்சி மியான்மரில் இருந்த கடத்தல் கும்பல் இளைஞரை விடுவித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள மூவாநல்லூர் வெட்டிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் முருகையன். இவரது மகன் முகேஸ்வரன் (24). இவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக தாய்லாந்து நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த முகேஸ்வரன், மீண்டும் கடந்த ஆகஸ்ட் 8-ஆம் தேதி தாய்லாந்து சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து ஏஜென்ட் மூலம் வேலைக்காக மியான்மர் நாட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு முகேஸ்வரனின் செல்போனில் இருந்து அவரது தந்தை முருகையனின் தொலைபேசிக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய முகேஸ்வரன், தன்னை மியான்மரில் மர்ம நபர்கள் கடத்தி வைத்துள்ளதாகவும், ரூ.6.25 லட்சம் பணம் கொடுத்தால் மட்டுமே தன்னை விடுவிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், அந்த பணத்தை திருச்சியில் தாங்கள் தெரிவிக்கும் நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் கடத்தல் கும்பல் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த முருகையன், தனது மகனை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி கடந்த 20-ஆம் தேதி திருவாரூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில், வடுவூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் தனி அலுவலராக நியமிக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டார். போலீசார், கடத்தல் கும்பல் கூறியபடி பணத்தை கொடுக்க சம்மதிப்பது போல் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் தொடர்பு கொண்டனர்.
இதையடுத்து திருச்சியில் பணத்தை பெற்றுக்கொள்ள வரும் நபரை கண்காணிக்கும் வகையில் போலீசார் திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொண்டனர். திருச்சியில் உள்ள குறிப்பிட்ட இடத்திற்கு சென்று, பணத்தை கொடுப்பது போல் நடித்து ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், திருச்சி பாலக்கரை பகுதியில் வசித்து வரும் ராஜஸ்தானைச் சேர்ந்த மாவாராம் என்பவர் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் சாமலாராம் என்பவருக்கும் இந்த சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து வடுவூர் காவல் நிலைய ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன், மியான்மரில் இருந்த கடத்தல் கும்பலிடம் நேரடியாக பேசியதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்டுள்ள மாவாராம் மற்றும் சாமலாராம் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், முகேஸ்வரனை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் போலீசார் தரப்பில் கடுமையாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிகிறது.
போலீசாரின் எச்சரிக்கையால் அச்சமடைந்த கடத்தல் கும்பல், முகேஸ்வரனை விடுவித்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் இருந்து விடுவிக்கப்பட்ட முகேஸ்வரன், தற்போது தாய்லாந்து சென்றுள்ளதாகவும், அங்கிருந்து விமானம் மூலம் இன்று மதியம் சென்னை வந்தடைந்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை வந்த அவர், தொடர்ந்து தனது சொந்த ஊரான மன்னார்குடி அருகே உள்ள வெட்டிக்காடு கிராமத்திற்கு இரவுக்குள் வந்து சேருவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மரில் வேலைக்காக சென்ற இளைஞர் கடத்தப்பட்டு, ரூ.6.25 லட்சம் பணம் கேட்டு மிரட்டப்பட்ட சம்பவத்தில் போலீசார் துரிதமாக செயல்பட்டு, பணம் பெற வந்த நபரை கைது செய்து, கடத்தப்பட்ட இளைஞரை மீட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், காவல்துறையின் நடவடிக்கைக்கு பாராட்டையும் ஏற்படுத்தியுள்ளது.