கோவை பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 60-வது ஆண்டு பிஎஸ்ஜி கோப்பைக்கான அகில இந்திய ஆண்கள் கூடைப்பந்து போட்டியும், முதன்முறையாக மகளிர் பிரிவு போட்டிகளும் வரும் ஆகஸ்ட் 26 முதல் 30-ஆம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி சர்வதேச உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது.


​இதுகுறித்து பிஎஸ்ஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபால கிருஷ்ணன் மற்றும் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் முனைவர் ஆர். ருத்ரமூர்த்தி ஆகியோர் தெரிவித்ததாவது:


​கோவை மாவட்ட விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் கடந்த 59 ஆண்டுகளாக பிஎஸ்ஜி நிறுவனம் இப்போட்டிகளை சிறப்பாக நடத்தி வருகிறது. 60-வது ஆண்டை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் பெண்களுக்கான அகில இந்திய கூடைப்பந்து போட்டியும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


​இப்போட்டிகள் தினமும் மாலை வேளையில் மட்டும் நடைபெறும். இதில் ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி (தமிழ்நாடு), இந்திய விமானப்படை (டெல்லி), இந்திய கப்பற்படை (லோனாவாலா), ஓஎன்ஜிசி (டெல்லி), கேரள மாநில மின்வாரிய அணி, ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகம் (சென்னை) மற்றும் தமிழ்நாடு இதர அணி ஆகிய 7 புகழ்பெற்ற அணிகள் பங்கேற்கின்றன. பெண்கள் பிரிவில் தென் மத்திய ரயில்வே (செகந்தராபாத்), தென் மேற்கு ரயில்வே (ஹூப்ளி), கேரள மின்வாரியம் (திருவனந்தபுரம்) மற்றும் கோவை மாவட்ட மகளிர் அணி ஆகிய 4 அணிகள் களம் காண்கின்றன.


​போட்டியில் வெற்றி பெறும் ஆண்கள் அணிக்கு முதலிட பரிசாக ₹1,00,000 மற்றும் சுழற்கோப்பையோடு, அடுத்தடுத்த இடங்களுக்கு ₹75,000, ₹40,000, ₹30,000 மற்றும் சிறந்த வீரருக்கு ₹10,000 வழங்கப்பட உள்ளது.

அதேபோல பெண்கள் பிரிவில் முதல் பரிசு ₹75,000 மற்றும் சுழற்கோப்பை, இரண்டாம் பரிசு ₹50,000, மூன்று மற்றும் நான்காம் இடங்களுக்கு தலா ₹25,000 மற்றும் சிறந்த வீராங்கனைக்கு ₹10,000 என மொத்தம் ₹4,35,000 பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. மேலும், சர்வதேச அளவில் சாதித்த பிஎஸ்ஜி முன்னாள், இந்நாள் விளையாட்டு வீரர்களுக்கு சிறப்பு செய்து பணமுடிப்புகள் உட்பட மொத்தம் ₹6 இலட்சம் வரை பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
​ஆகஸ்ட் 26 மாலை 5:00 மணிக்கு நடைபெறும் தொடக்க விழாவில் பாரத ஸ்டேட் வங்கியின் கோவை மண்டல மேலாளர் ஆர். ஆர். காயத்ரி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று போட்டிகளை தொடங்கி வைக்கிறார்.


​ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெறும் பரிசளிப்பு விழாவிற்கு பிஎஸ்ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எல். கோபால கிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். இதில் இந்திய கூடைப்பந்து சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு அரசு பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான திரு. ஆதாவ் அர்ஜுனா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பரிசுகளை வழங்குகிறார்.

சக்தி நிறுவனங்களின் தலைவர் முனைவர் எம். மாணிக்கம் மற்றும் சிஆர்ஐ பம்ப்ஸ் நிறுவனங்களின் நிர்வாக இயக்குனரும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவருமான ஜி. செல்வராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்கின்றனர்.


​செய்தியாளர் சந்திப்பில் பிஎஸ்ஜி ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளர் டி. பழனிசாமி உடன் இருந்தார். போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் பிஎஸ்ஜி நிறுவன மேலாண்மை மற்றும் ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள் இணைந்து சிறப்பாக செய்து வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *