காவிரியின் குறுக்கே ராசிமணலில் அணை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மன்னார்குடியில் பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தல்
மன்னார்குடி., ஆக. 24
பரந்தூர் விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருப்பது விவசாயிகளின் நீண்டகால போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் தெரிவித்துள்ளார்.
மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் பெயரில், விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளைநிலங்களை கையகப்படுத்தவும், ஏரிகள், நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப் பாதைகளை பாதிக்கும் வகையிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம்–2023 கொண்டு வரப்பட்டதாகவும், அதன் மூலம் கிராமம் கிராமமாக விவசாய நிலங்கள் மற்றும் நீர்நிலைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டதாகவும் விவசாயிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர்.
இந்த நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை கைவிடுவதாக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருப்பதை தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு வரவேற்கிறது. இதற்காக முதலமைச்சருக்கு நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். விவசாயிகளின் தொடர் போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவே இதனை கருதுகிறோம்.
அதே நேரத்தில், விவசாயிகளின் நில உரிமை மற்றும் நீர்நிலைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம்–2023 குறித்து மறுபரிசீலனை செய்து, விவசாயிகளின் நலனுக்கு எதிரான அம்சங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
முதலீடுகள் ஆந்திராவுக்கு சென்ற நிலை
சென்னைக்கு வடக்கே ஆந்திர எல்லையையொட்டிய பகுதியில் பரந்தூர் விமான நிலையத்தை அமைப்பதற்காக தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளால், தமிழகத்திற்கு வரவேண்டிய தொழில் முதலீடுகளில் ஒரு பகுதி ஆந்திர மாநிலத்தை நோக்கி சென்றதாக பி.ஆர். பாண்டியன் தெரிவித்தார்.
தற்போது சென்னைக்கு தெற்குப் பகுதியில் புதிய விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டால், தொழில் முதலீடுகளை தமிழகத்தை நோக்கி ஈர்க்கும் வாய்ப்பு உருவாகும். எனவே, விமான நிலையம் அமைப்பது தொடர்பான எதிர்கால திட்டங்களில் விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார்.
ராசிமணலில் அணை கட்ட வேண்டும்
காவிரியின் உபரி நீரை தமிழகத்தின் பாசனத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் வகையில், காவிரியின் குறுக்கே ராசிமணலில் புதிய அணை கட்டுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாக தொடங்க வேண்டும்.
கர்நாடக முதலமைச்சர் காவிரியின் உபரி நீர் தமிழகத்தின் வழியாக கடலில் கலப்பதாக கூறியிருப்பது உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டு. தமிழகத்திற்கு கிடைக்கும் காவிரி நீரை முழுமையாகப் பயன்படுத்துவதற்கான நீர்மேலாண்மைத் திட்டங்களை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.
ராசிமணலில் அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கையை தயாரித்து, அதற்கான நிர்வாக மற்றும் தொழில்நுட்ப நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும். இதற்கான ஒப்புதல் கடந்த 2024-ம் ஆண்டிலேயே தமிழக அரசால் வழங்கப்பட்டுள்ளதாகவும், ராசிமணலில் அணை கட்டுவதற்கு கர்நாடக விவசாயிகள் தரப்பிலும் ஆதரவு இருப்பதாகவும் பி.ஆர். பாண்டியன் கூறினார்.
கோதாவரி–காவிரி இணைப்பு திட்டத்திற்கு எதிர்ப்பு
கோதாவரி–காவிரி இணைப்பு திட்டம் தமிழகத்தின் நீர்வளத் தேவைகளுக்கு பொருத்தமான தீர்வாக இருக்காது. இந்த திட்டத்தை காரணம் காட்டி மேகதாட்டு அணை கட்டுவதற்கு மத்திய அரசு கர்நாடகத்திற்கு சாதகமாக செயல்படுகிறதா என்ற சந்தேகம் தமிழக மக்களிடையே எழுந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை உரிய காலத்தில் பெய்யும் போது, காவிரியில் பெருமளவு உபரி நீர் உருவாகிறது. சில காலகட்டங்களில் சுமார் 4 லட்சம் கனஅடி வரையிலான உபரி நீர் கொள்ளிடம் வழியாக கடலில் கலக்கும் நிலை ஏற்படுகிறது. இதேபோன்று கோதாவரி ஆற்றிலும் பருவமழைக் காலங்களில் அதிகளவு உபரி நீர் கடலில் கலக்கிறது.
இத்தகைய சூழ்நிலையில் கோதாவரி–காவிரி இணைப்பு திட்டத்தின் மூலம் தமிழகத்தின் பாசனத் தேவைக்கு நிலையான தீர்வு காண முடியும் என்ற கருத்தை மத்திய, மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். திட்டமிடப்படாத வகையில் ஆறுகளை இணைப்பதன் மூலம் எதிர்காலத்தில் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வள மேலாண்மையில் பேரழிவை சந்திக்கும் நிலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கிறோம்.
காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசிமணல் திட்டம்
பெருந்தலைவர் காமராஜர் அடிக்கல் நாட்டிய ராசிமணல் பகுதியில் அணை கட்டும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவது தமிழகத்தின் நீர்வளப் பாதுகாப்புக்கும், விவசாயிகளின் பாசனத் தேவைக்கும் மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.
எனவே, ராசிமணல் அணை திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து, தேவையான அனுமதிகளைப் பெற்று, பணிகளை விரைந்து தொடங்க தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி நீரை முழுமையாகத் தமிழக விவசாயிகளின் பாசனத் தேவைக்குப் பயன்படுத்துவதற்கான நீர்வளத் திட்டங்களை அரசு முன்னுரிமையுடன் செயல்படுத்த வேண்டும் என பி.ஆர். பாண்டியன் வலியுறுத்தினார்.