கம்பம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க இடம் தேர்வு பணி தீவிரம்
ஜெகநாத் மிஸ்ரா எம்.எல்.ஏ. தகவல்
கம்பம் தொகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அரசு கலைக் கல்லூரி அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்
.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது அதன் விபரம்
தேனி மாவட்டம், கம்பம் தொகுதியில் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்பது இருந்து வந்தது. கடந்த தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிக் காலங்களில் இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை.
இந்த நிலையில், எனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, கம்பம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் வலியுறுத்திப் பேசினேன். இதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் கம்பம் தொகுதியில் அரசு கலைக் கல்லூரி அமைக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, கல்லூரி அமைப்பதற்கான இடம் தேர்வு செய்யும் பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழக அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்குள், தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி, அரசு கலைக் கல்லூரி அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தொடர்ந்து, தேர்தல் நேரத்தில் அறிவித்த திட்டங்களை செயல்படுத்துவதோடு, கம்பம் தொகுதி மக்களின் தேவைகளை நேரில் அறிந்து, அவற்றுக்கு விரைவாக தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்
மேலும், எனது கோரிக்கையை ஏற்று, இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் தேனியில் மணிமண்டபம் அமைக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். இதுவும் தேனி மாவட்ட மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் முக்கிய அறிவிப்பாகும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் ஜெகநாத் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.