கோட்டூர்., ஆக.27

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்ட நிலையில், அதன் ஒரு பகுதியாக கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது.

லஞ்ச ஒழிப்பு காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர் நந்தகோபால் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். பின்னர் அலுவலகத்தின் வாயிலை மூடி, அங்கிருந்த ஆவணங்கள், பணப்பரிவர்த்தனை தொடர்பான பதிவுகள் உள்ளிட்டவற்றை தீவிரமாக ஆய்வு செய்தனர்.

சோதனையின்போது ஊராட்சி செயலர் மற்றும் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் 2 ஊழியர்கள் என 3 பேரிடம் இருந்து கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் பணம் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை ஒரே இடத்தில் வரவழைத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற சோதனையின் முடிவில், கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் பணம் மட்டும் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், இதுதொடர்பாக விசாரணை மற்றும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தெரிவித்தனர்.

கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட இந்த திடீர் சோதனை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *