தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரம், திருப்பூர் மாவட்டத்தில்
தாராபுரம் அருகே சின்ன மருதூர் பகுதியில் விவசாய நிலத்தில் கிரசர் ஜல்லி குவாரி மற்றும் தார் கலவை தொழிற்சாலை அமைக்க அரசு துறைகள் வழங்கியுள்ள அனுமதிகளை ரத்து செய்யக் கோரி, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு புகார் மனு அளித்தனர். அனுமதிகளை ரத்து செய்யாவிட்டால், பொதுமக்களைத் திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டத்துக்கு உட்பட்ட கம்பளியம்பட்டி ஊராட்சி, சின்ன மருதூர், குருணைக்கல்பட்டி, தூங்கவலசு, சத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சார்பில், போராட்டக் குழு ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் திரண்டனர்.
அவர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு, தங்கள் பகுதியில் கிரசர் குவாரி மற்றும் தார் கலவை தொழிற்சாலை அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதிகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜாவிடம் புகார் மனு அளித்தனர்.
புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
கம்பளியம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன மருதூர் பகுதியில் கொள்ளுமேடு, சத்திரமுக்கு உள்ளிட்ட இடங்களின் அருகே சுமார் 10 ஏக்கர் விவசாய நிலத்தில் ஜல்லிக் கற்களை உடைக்கும் கிரசர் குவாரி மற்றும் சாலைகள் அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் தார் கலவை தொழிற்சாலை அமைக்க இரண்டு தனியார் நிறுவனங்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன.
இதற்காக மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை, சுரங்கம் மற்றும் கனிமவளத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளிடம் இருந்து அனுமதி மற்றும் தடையின்மைச் சான்றுகள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், தொழிற்சாலைகள் அமைய உள்ள பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் எந்தவிதமான ஆலோசனையோ, ஒப்புதல் கடிதமோ பெறப்படவில்லை. கிராம மக்கள் அனைவரும் தொழிற்சாலை அமைக்க ஒப்புதல் அளித்ததாக தவறான தகவல்களையும், போலியான ஒப்புதல் கடிதங்களையும் அளித்து அனுமதி பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. எனவே, இதுகுறித்து அதிகாரிகள் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், கிரசர் குவாரி செயல்படத் தொடங்கினால், கற்களை வெடி வைத்து தகர்ப்பது, கனரக வாகனங்களின் இயக்கம் உள்ளிட்ட காரணங்களால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். காற்றில் பரவும் கல் மற்றும் மண் துகள்கள் பயிர்கள் மீது படிந்து, விவசாய உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
அதேபோல், தார் கலவை தொழிற்சாலையில் தாரை சூடாக்கி பதப்படுத்தும்போது வெளியாகும் புகை மற்றும் ரசாயனத் துகள்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறுகள், தோல் பாதிப்புகள் உள்ளிட்ட உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. நிலத்தடி நீரும் மாசுபடும் வாய்ப்பு உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கம்பளியம்பட்டி ஊராட்சிப் பகுதிகளில் ஏற்கனவே நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது. பல இடங்களில் குடிநீருக்கே தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்களும் வறண்டு காணப்படுகின்றன. இத்தகைய சூழ்நிலையில், விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்க்கையை மேலும் பாதிக்கும் வகையில் புதிய தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிப்பது ஏற்கத்தக்கதல்ல.
எனவே, பொதுமக்களிடம் உரிய கருத்துக் கேட்பு மற்றும் ஆலோசனை நடத்தாமல் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அனுமதி மற்றும் தடையின்மைச் சான்றுகளை உடனடியாக ரத்து செய்து, கிரசர் குவாரி மற்றும் தார் கலவை தொழிற்சாலை அமைக்கும் பணிகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் தொழிற்சாலைகள் அமைக்க அனுமதிக்கப்பட்டால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களைத் திரட்டி மிகப்பெரிய அளவில் தொடர் போராட்டங்களை நடத்துவோம் எனவும் மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மனுவைப் பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியர் பெலிக்ஸ் ராஜா, கிராம மக்களின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். மேலும், பிரச்சினைக்குரிய இடத்தை தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்வார்கள் என்றும், இதுதொடர்பாக மாவட்ட கலெக்டரிடம் விரிவாக எடுத்துரைத்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் கிராம மக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் கூறினார்.
இதையடுத்து, அதிகாரிகளின் உறுதியை ஏற்றுக்கொண்ட கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். கிரசர் குவாரி மற்றும் தார் கலவை தொழிற்சாலை அமைப்பது தொடர்பான இந்தப் பிரச்சினையால் சின்ன மருதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.