தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

தாராபுரம்,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்கு முழு கொள்ளளவு தண்ணீர் வழங்கக் கோரி விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

உப்பாறு அணைக்கு திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் வழங்க வேண்டும் என்றும், அணையை முழு கொள்ளளவுக்கு நிரப்ப வேண்டும் என்றும் வலியுறுத்தி உப்பாறு பாசன விவசாயிகள் மற்றும் பல்வேறு விவசாய சங்கத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த 18-ஆம் தேதி தாராபுரம் பைபாஸ் சாலையில் விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுமூக முடிவு ஏற்படாததால், தாராபுரம் கோட்டாட்சியர் தலைமையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

அதன்படி தாராபுரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில், உப்பாறு அணைக்கு தண்ணீர் திறப்பது தொடர்பாக விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். ஆனால், தண்ணீர் திறப்பது குறித்து உறுதியான முடிவு எதுவும் எடுக்கப்படாததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதனால் உப்பாறு பாசன விவசாயிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. தண்ணீர் திறப்பது குறித்து அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இல்லையெனில் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *